27 நவ., 2008

எது கவிதை - கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

உள்ளத்துள்ளது கவிதை - இன்ப
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை.

தாயுமானவரின் பராபரக்கண்ணி-1:

எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே
சினம் அடங்கக்கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும்
மனம்அடங்கக் கல்லார்க்கு வாய்ஏன் பராபரமே.

பட்டினத்தார் பாடல்

ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர்செல்வமெல்லாம்
அன்றென்றிரு, பசித்தோர் முகம்பார், நல்லறமும்நட்பும்
நன்றென்றிரு, நடுநீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கு உபதேசமிதே.

சிவவாக்கியர் பாடல்

நட்டகல்லைச் சுற்றிவந்து நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணென்று சொல்லும் மந்திரமேதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ.

ஒருமுற்றுருவகக் காப்பியம் - யோகி சுத்தானந்த பாரதியார்

இரப்பவர் இல்லை, இல்லை என்பவர் இல்லை, உள்ளம்
கரப்பவர் இல்லை, பேதம் காண்பவர் இல்லை, அன்பைத்
துறப்பவர் இல்லை, வஞ்சர் தொல்லையும் இல்லை, தன்னை
மறப்பவர் இல்லை, உண்மை மறுப்பவர் இல்லைமாதோ.

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

வாடினேன்
வாடி வருந்தினேன்
மனத்தால் பெருந்துயர்
இடும்பையில் பிறந்து
கூடினேன்
கூடி இளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன்
ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வென்னும் பெரும்பதம் திரிந்து
நாடினேன்
நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும் நாமம்.
- திருமங்கை ஆழ்வார் பாசுரம்

திருப்பாவை:

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றுநீர் ஆடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளற் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

26 நவ., 2008

திருமந்திரம்-8 உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம்

உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம்
தெள்ளத் தெளிந்தவர்க்குச் சீவன் சிவலிங்கம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
கள்ளப்புலன் ஐந்தும் காளாமணி விளக்கே.

தேவாரத் திருப்பதிகம்-3

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நிழலே.
- திருநாவுக்கரசர்

தேவாரத் திருப்பதிகம்-1:

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படாம் நடலை இல்லோம்
ஏமாப்பும் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை.
- திருநாவுக்கரசர்

கோளறு திருப்பதிகம்

வேயுறு தோழி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

மணிமேகலை-1:

இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணை யாவது.

நல்வழி-1: "பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்"

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்

கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.

ஆசாரக்கோவை-1:

நன்றி அறிதல், பொறையுடைமை, இன்சொலோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு
ஒப்புரவாற்ற அறிதல் நட்டல் இவையெட்டும்
சொல்லிய ஆசார வித்து.

நான்மணிக்கடிகை-1:

கண்ணிற் சிறந்த உறுப்பில்லை, கொண்டானின்
நுண்ணிய கேளிர் பிறரில்லை, மக்களின்
ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை, ஈன்றாளோடு
எண்ணக் கடவுளும் இல்.

தமிழ்க்கவிஞர் பெருமை

கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை - மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

தமிழின் பெருமை

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவதெங்கும் காணோம் - மகாகவி சுப்பிரமண்ய பாரதியார்

தமிழின் தொன்மை

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
பொங்குகடல் இவற்றோடும் பிறந்த தமிழ்..
- பாவேந்தர் பாரதிதாசன்

18 நவ., 2008

என்ன நடக்கிறது?-3: "74 அரசு பள்ளிகளில் எட்டு மாதமாக மின்சாரம் துண்டிப்பு"

18.11.௦08 தினகரன் நாளிதழில் வெளியான செய்தியிலிருந்து ஒரு பகுதி:
சென்னிமலை ஒன்றியத்தில் ௭௪ அரசு பள்ளிகளில் கடந்த எட்டு மாதமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. கணினி, டிவிடி மூலம் கல்வி கற்கமுடியாமல் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நன்றி: "தினகரன்" நாளிதழ்.

இன்றைய சிந்தனைக்கு-30: "கண்ணி்ற்கழகு"

கண்ணிற்கு அழகு சேர்ப்பது தாட்சண்யம் என்னும் கருணையுள்ள அருட்பார்வை மட்டுமே. அப்படியில்லாமல் பிறரது துன்பத்தைக் கண்டுகொள்ளாமல் செல்பவனின் கண்கள் இரண்டும், முகத்தில் இருக்கும் புண்கள் போன்றதாகும். - திருவள்ளுவர்.
நன்றி: தினமலர், மதுரை, "ஆன்மிகம் அறிவோமா, 18.11.2008.

நெல்லையப்பன் கவிதைகள்-40: "பக்கத்து வீட்டுக்காரர்"

நம் வீட்டு "இந்து" பேப்பர்
நமக்கு முன் படித்துவிடுவார்;
நமது வீட்டு டெலிபோன் நம்பர்
அவரது விசிட்டிங் கார்டில்;

எதிர்வீட்டு கரண்ட் பில் கட்ட
நமது வாஹனத்தில் விரையும்
நல்ல சமூக சேவகர்;
இரவல் வாங்கியதை மறக்கும்
செலக்டிவ் அம்னீஷியாக்காரர்;

மாதம் ஒரு காரணம் சொல்லி
நிதிவசூல் செய்யும்
நிகரற்ற நன்கொடை நாயகன்;
பெண்கல்வியை மதித்து
அவர் பெண் படிப்பிற்காக,
நம் வீட்டில் டி.வி. பார்ப்பார்;

உரிமையோடு "காபி" குடித்து,
கைப்பக்குவம் சிலாகிக்கும்
மனோதத்துவ நிபுணர்;
சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரர் -
நான்கு பக்கமும்
பக்கத்து வீடுகள் இருக்கின்றதே!

17 நவ., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-39: "தகுதிகள்"

பலமுறை
விளம்பரம் செய்தும்,
நேர்முகத் தேர்வுக்கு
அனைவரையும் அழைத்தும்,
பத்து இடங்களுக்கு
ஆயிரம் பேரை பரிசோதித்தும்,
ஆறு இடங்களுக்கே
ஆட்கள் கிடைத்தார்கள்!

எந்த ஒரு வேலைக்கும்
தகுதியில்லாமல் இளைஞர்களை ,
தயாரிக்கும் சேவையினை,
தப்பாமல் செய்வது
நம் பல்கலைக்கழகங்கள்.

வெள்ளைக்காரர்களை
விரட்டிவிட்டு,
மெக்காலே பிரபுவின்
கல்வியை மட்டும்
பிடித்துக் கொண்டோம்.

உதவியாளர்களை மட்டும்
உற்பத்தி செய்ய
உருவான திட்டம்
வேறெப்படி இருக்கும்?

தெரியாத மொழியில்
புரியாத பாடத்தை,
பிடிக்காத ஒருவர்
விருப்பமின்றி நடத்த,
மாணவர்களின் கதி?

இங்கிருப்பது
வேலையில்லாத்
திண்டாட்டமல்ல ;
வேலைக்குத்
தகுதி இல்லாதவர்களின்
திண்டாட்டம்தான்!

நலக்குறிப்புகள்-23: "கொத்தமல்லி"

1. கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க கொத்தமல்லி உதவும்.
2. நல்ல ஜீரண சக்தியைத் தரும்.
3. தேவையில்லாத ஏப்பத்தைக் கட்டுப்படுத்தும்.
4. கொத்தமல்லி விதையைத் தட்டி, தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து கஷாயம் வைத்துக் குடித்துவர பித்தம் (உஷ்ணம்) தணியும்.
5. அறை டம்ளர் பாலில் இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி விதையும், அறை டம்ளர்
தண்ணீரும் கலந்து கொதிக்க வைத்துப் பருகிவர இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
ஆதாரம்: தினமணி கதிர், 16.11.08

நன்றி: தினமணி கதிர்.



கடிதம்-2: "பேயாட்டம்"

சட்டம் படிக்கும் மாணவர்கள் கைகளில் சட்ட புத்தகத்திற்குப் பதிலாக கத்திகளும், வீச்சரிவாளும், இரும்பு ராடுகளும், குண்டாந்தடிகளுமாக சென்னை அம்பேத்கார் அரசு சட்டக் கல்லூரியில் வலம் வந்து அராஜகம் செய்திருக்கின்றனர்.

மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் ஜாதி, நக்சல், அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், கல்வெட்டுக்கள், சுவரொட்டிகள் போன்றவற்றை அனைத்து சட்ட, பிற கல்லூரிகளின் முன் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்; தற்போது இருப்பதையும் அகற்ற வேண்டும்.

மாணவர் மன்றம் என்ற பெயரில் நடைபெறும் கூட்டங்களில் ஜாதிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பதற்கும் தடை விதித்து, அரசு அவசரச் சட்டம் இயற்ற வேண்டும்.
- எஸ்.குமார், கோவை.
"இது உங்கள் இடம்" (ஆசிரியர்க்குக் கடிதங்கள் பகுதி), தினமலர், மதுரை, நவம்பர் 16, 2008.
நன்றி: திரு.எஸ்.குமார் & தினமலர்.

13 நவ., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-38: "யோகிக்கு வெகு அருகில்"

"நான்" அழிந்தால்தான்
ஏந்த முடியும் கையை;
பெயர் தொலைத்தால்தான்
எடுக்க முடியும் பிச்சை.

குடும்பம் விட்டு,
உற்றார் உறவினர் மறந்து,
ஒரு யோகிக்கு வெகு அருகில்
வருபவர்கள் பிச்சைக்காரர்கள்;
அழுக்கு மட்டுமே இவர்களை
அந்நியப்படுத்துகிறது;
வயிறும் வகை பிரிகின்றது.

ஒருவகையில் இவர்கள்
"அந்தக் கணத்தில்" வாழும்
ஜென் துறவிகள்;
கடந்த, எதிர் காலங்களைக்
கடந்தவர்கள்.

வினைப்பயனை
இந்த ஜென்மத்திலேயே
அனுபவிப்பவர்களை
அவமதிக்காதீர்கள்.

"பிச்சை போடாதீர்கள்"
என்பது
ஒரு விபரீதமான பகுத்தறிவு;
இவர்களின் இருப்பிற்கு
வெட்கித் தலைகுனிய
வேண்டும் நாம்.

இவர்களுக்கு உதவி,
மனிதநேயத்தை
தக்கவைத்துக்கொள்ள
வாய்ப்பளித்தமைக்கு
நன்றி சொல்வோம் நாம்.

நலக்குறிப்புகள்-22: "ஊட்டச்சத்துக்கள் சிதையாமல் சமைப்பது எப்படி?"

1. காய், கனிகளைக் கழுவிய பிறகே வெட்டுங்கள்.
2. காய்களை மூடிய பாத்திரத்தில் வேக வைக்கவும்.
3. உணவை அதிகம் வேக வைப்பதைத் தவிர்க்கவும்.
4. சோடா உப்பை உணவில் சேர்த்தால் வைட்டமின்களைப் பாதிக்கும். எனவே சோடா உப்பை சமையலில் சேர்ப்பதைத் தவிர்க்கவும்.
5. குறைந்த அளவு நீரில் ஓரிரு முறை மட்டும் அரிசியைக் களையவும்.
6. சோறு ஆக்கும் பொது அதிக நீரைச் சேர்த்து வடிப்பதைத் தவிர்த்து, சரியான அளவு நீரைச் சேர்த்து ஆக்கவும்.
7. அரிசியை அதிகம் பாலிஷ் செய்யாமல் பயன்படுத்தவும்.
8. கோதுமைத் தவிட்டில் அதிக நார்ச்சத்து உள்ளது. எனவே கோதுமை மாவை சலித்து, தவிடு நீக்காமல் அப்படியே பயன்படுத்துக.
9. நோய் தாக்கிய தானியங்களைப் பயன்படுத்தாதீர்.
10. உருளைக்கிழங்கில் சில இடங்களில் படர்ந்து காணப்படும் பச்சை நச்சுத்தன்மை வாய்ந்தது. எனவே பச்சை நிறம் கலந்த உருளைக்கிழங்கைப் பயன்படுத்தாதீர்.
11. பொரித்த எண்ணையை மீதம் வைத்து மறுபடியும் பயன்படுத்தாதீர்கள்.

"அறிக அறிவியல்" நவம்பர் மாத இதழில் "ஆரோக்கிய உணவு" என்ற தலைப்பில் டாக்டர் சே.குமரப்பன் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.
நன்றி: டாக்டர் சே.குமரப்பன் அவர்கள் & "அறிக அறிவியல்".

7 நவ., 2008

இயற்கை உணவுக் குறிப்பு-3: "ராகிப் புட்டு"

கேழ்வரகை எட்டு மணி நேரம் ஊறவைத்து, இடித்துச் சலித்த மாவில், தேங்காய்த்துருவல், வெல்லம் சேர்த்துக் குழாயிலோ, இட்லிப்பானையிலோ வேகவைத்துத் தயாரிக்கலாம். இது இனிப்புப் புட்டு.

ராகி மாவுடன் தேங்காய்த்துருவல், மிளகுத்தூள் சேர்த்துத் தயாரித்தால் அது காரப்புட்டு ஆகும்.

நன்றி: "இயற்கை நாதம்", அக்டோபர் 2008, ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்க வெளியீடு.

கருத்துக்கள்-11: "புகைக்குடி" - யோகி சுத்தானந்த பாரதியார்

சந்தைக்கூட்டம், வண்டிக்கூட்டம், காட்சிக்கூட்டங்களில் எல்லாம் கரிக்காற்று மிகுதி. கரிக்காற்றும், வியர்வை நாற்றமும் ஆளைக் கெடுக்கும். சுருட்டுப் புகையும் கூடிவிட்டால் வேறு வினை வேண்டா! இச்சுருட்டை எந்த சைத்தான் கொண்டுவந்தான்? நெஞ்சைக்கெடுத்து, வாயைச் சாக்கடை நாற்றமாக்கி, பல்லைக் கெடுத்து, பசியைக் கெடுத்து, உருசியைக் கெடுத்து, நச்சுப் புகையால் சுற்றிலும் உள்ள பலருக்குத் தீங்கு விளைவிக்கும் இப்புகைக்குடிகளை ஏனோ பகுத்தறிவுள்ள மனிதன் பழகினான்! பார்த்தால் ஒரு பைசா பீடி; புகைத்தால் பல பேருக்குக் கேடு! ஒரு பெரிய அறையின் காற்றைக் கெடுக்க ஒரு சிறிய சுருட்டுப் போதும்! ஒருவர் பிரம்மப்பத்திர புகைவிட்டால் 2000 பேர் மூச்சைக் கெடுப்பதாகும். மூச்சைப் பிடித்து ஆளைக் கொள்கிறதே! இந்த சுருட்டுப் பாவியை ஒழிக்கலாகாதா? அட, நாகரிகமே! பொறிப்புகை, கரிப்புகை, வண்டிப்புகை, சுருட்டுப்புகை, மண்ணெண்னைப்புகை, சாராய வாடை, கும்பல் நாற்றம்! காடு, மலை, வானம், கடல் வெளிகளுக்குப் போனால்தான் நல்ல காற்று!
- யோகி சுத்தானந்த பாரதியாரின் "உடல் உறுதி" என்ற நூலிலிருந்து.
நன்றி: இயற்கை நாதம், அக்டோபர் 2008, (ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்க வெளியீடு)

6 நவ., 2008

ஹைகூ-13:

இளைப்பாற வா
சும்மா கிடக்கிறது
எனது நிழல்.

நன்றி: திரு ராஜமுருகுபாண்டியன்

என்ன நடக்கிறது?-2: "கறுப்புப்பணம் கொட்டிக் கிடக்குது ஸ்விஸ் வங்கியில்!"

வேற்று நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் கருப்புப்பணம் சுமார் 64 லட்சம் கோடி ரூபாய் என்ற அதிர்ச்சித் தகவலை, நவம்பர் 5, 2008 குமுதம் இதழில் வெளியாகியுள்ள புஷ்கின்ராஜ்குமாரின் கட்டுரை தெரிவிக்கிறது. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், ஸ்டாக் புரோக்கர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், சினிமா நடிகர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கிரிமினல்களுக்குச் சொந்தமானது இந்தப் பணம் என்று கூறப்படுகிறது.

சர்வதேச பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், விற்பனை, சர்வதேச அளவில் விபச்சாரம், புளு பிலிம் மற்றும் சூதாட்டத்திற்கு இந்தப் பணம் பயன்படுத்தப் படுவதாகவும் கூறப்படுகிறது.

லீச்டென்ஸ்டீன் என்கிற சிறிய நாட்டின் எல்.டி.ஜி. வங்கியில் கறுப்புப்பணம் வைத்திருந்த வெளிநாட்டவர்கள் பற்றிய தகவலை ஜெர்மானிய நாட்டின் புலனாய்வுத்துறை சேகரித்துள்ளது. அதனிடமிருந்து பல நாடுகள் தங்கள் நாட்டவர்களின் கறுப்புப்பண விபரங்களைக் கேட்டறிந்து, அந்தக் கறுப்புப்பணத்தை தங்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த வங்கியிலும் இந்தியர்கள் பலர் கறுப்புப்பணத்தை வைத்துள்ளனர். இந்திய அரசு கேட்டுக் கொண்டால் பெயர் உட்பட அனைத்துத் தகவல்களையும் தருவதாக ஜெர்மானிய புலனாய்வுத்துறை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. ஆனாலும் இந்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை என்று அந்தக் கட்டுரை கூறுகிறது.

சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலருமான திரு மோகனகிருஷ்ணன், டெல்லி உச்சநீதி மன்றத்தில் இதுகுறித்து பொது நல வழக்குத் தொடர ஆயத்தமாகி வருகிறார். நிச்சயம் அந்தக் கறுப்புப்பணப் பட்டியலை வெளியிட வைப்பேன் என்கிறார் அவர்.

நன்றி: திரு புஷ்கின்ராஜ்குமார், திரு மோகனகிருஷ்ணன் & குமுதம்.

அமிர்த மொழிகள்-2:

முகவரி சரியாக இருந்தால், தபால் எப்படி சரியான இடத்தைச் சென்று அடையுமோ, அதைப்போல, நாம் செய்யும் செயலின் நோக்கம் சரியானதாக இருந்தால் பலனும் முழுமையாக நம்மை வந்து சேரும். - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

நெல்லையப்பன் கவிதைகள்-37: "ராமர் பாலம்"

அறையை
சுத்தம் செய்யும்போது
நான் தூக்கி எறிய இருந்த
அந்தப் பழைய துணியை,
தாத்தாவின் அண்டர்வேர் என்று
பிடுங்கி வைத்தான் நண்பன்.

அது எதுக்குடா?
அசிங்கமா,
இடைஞ்சலாத் தொங்குது;
காயப்போட இடம் வேண்டும்
என நான் சப்தமிட,
தாத்தாவின் ஞாபகச் சின்னமது
என்றான் நண்பன் பிடிவாதமாக.

தாத்தாவின் ஞாபகமாக
அவர் எழுதியவைகளைப்
படிக்கலாம், பதிப்பிக்கலாம்,
படித்தபடி நடக்கலாம்;
அதையெல்லாம் விட்டுவிட்டு,
அன்டர்வேரை வைத்து
இதென்ன மூட நம்பிக்கை?

என் நம்பிக்கைகளோடு
விளையாடாதே,
அது பாட்டுக்குத் தொங்கட்டும்;
இத்தனூண்டு இடத்தில்
கப்பலா விடப்போகிறாய்
என நண்பன் கடுப்படிக்க,

உன் தாத்தா காலத்தில்
அன்டர்வேரே கிடையாதே
என புதிதாய் நான் கொடிபிடிக்க,
சண்டை இன்னும் முடியவில்லை.
நீங்களாவது தீர்ப்புச் சொல்லுங்க!

நலக்குறிப்புகள்-20: "வெள்ளைப்பூண்டு"

வெள்ளைப்பூண்டு மாரடைப்பைத் தடுக்க வல்லது. பூண்டு இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. புற்றுநோய்க் கட்டிகள் முதல் தேவை இல்லாத கட்டிகள் வளர்வதையும் கட்டுப்படுத்த வல்லது பூண்டு.

கருத்துக்கள்-10: "அன்பை வளர்க்கும் இலக்கியம்" - ஜெயகாந்தன்

நம் நாட்டில் எல்லா வளங்கள் இருந்தும் மக்களிடம் ஒற்றுமை இல்லை. ஒற்றுமையை ஏற்படுத்த இலக்கியத்தால்தான் முடியும். மதம் என்பது ஒரு புத்தகம். இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் இவை எல்லாமே நூல்கள்தான்! நூல்களைத் தெய்வமாக மதிக்கும் பழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. நம் முன்னோர்களைத் தரிசிக்க ஒரே வழி புத்தகங்கள்தான்! மனக்கோணல்களைச் செம்மைப்படுத்துவதும் புத்தகங்கள்தான்! ...

உயிர் உள்ளவரை கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும். பருவம் மற்றும் ரசனைக்கேற்ப புத்தகங்களைத் தேர்வு செய்து படிக்க வேண்டும்....

புத்தகம் என்பது குரு, கடவுளுக்குச் சமம். அறிவியல் வளர்க்கும் இக்காலத்தில் அன்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அன்பில்லாமல் வாழ்வின் இயக்கம் அசையாது. அன்பை வளர்க்க இலக்கியம் தேவை!


ஈரோட்டில் ஆகஸ்ட் 2008-ல் நடந்த புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் திரு ஜெயகாந்தன் அவர்கள் பேசியதிலிருந்து ஒரு பகுதி.
நன்றி: "இனிய உதயம்", தமிழ் மாத இதழ், செப்டம்பர் 2008 & திரு ஜீவா தங்கவேல்.

இன்றைய சிந்தனைக்கு-29:

அன்பு இல்லாத அறிவு இருள்!
அன்பும் அறிவும் இணைந்தால்தான் அருள்!

- தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

5 நவ., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-36: "வறுமைக்கோடு"

தலையெழுத்தையும்
வறுமைக்கோட்டையும்
உழைப்பால் விளைந்த
வியர்வை அழித்துவிடாதா?

அழிக்க முடியாதென்பதற்கு
வறுமைக்கோடு ஒன்றும்
உள்ளங்கை ரேகையல்ல;
ரேகை தேய உழைப்பவனின்
தலைக்குமேல் ஒருபோதும்
வட்டமடிக்காது வறுமைக்கோடு;

மீறக்கூடாதென்பதற்கு
வறுமைக்கோடு ஒன்றும்
இலட்சுமணக் கோடல்ல;
உழைக்க விரும்பும்
வறியவனுக்கு வாய்ப்பாக
வேலை கொடுத்தால்
காலுக்கடியில் மிதிக்கலாம்
எந்த வறுமைக்கோட்டையும்.

அறுபது ஆண்டுகள்
முடிந்த பின்னும்
நாட்டின் எல்லைக்கோட்டைத்
தாண்டவில்லையே வறுமைக்கோடு!

அடுத்தவன் உழைப்பை உறிஞ்சி
தன் சட்டைக்கு
கஞ்சியாய்ப்போட்டு
விறைப்பாக நடப்பவன்
இருக்கும் வரை
என்றும் இருக்கும்
நாட்டில் வறுமை.

1 நவ., 2008

கருத்துக்கள்-9: "தூக்கம்" - கண்ணதாசன்

நான் தூக்கத்தில் மன்னன். பாழுங்காட்டில் துண்டை விரித்துப்படுத்தால்கூட, நான் சுலபமாகத் தூங்கிவிடுவேன். அதனால் நான் இழந்தது கொஞ்சமா? கேலிக்கு ஆளானது கொஞ்சமா? இரவில் சாப்பிட்டுவிட்டுக் காரில் ஏறிப்படுத்தால், காலையில் திருச்சி வரும்போதுதான் விழிப்பேன். அதிலே சிந்தனைக்கு லாபம் இருந்ததே தவிர, வந்த லாபம் போகவும் செய்தது.

கும்பகர்ணன் மட்டும் தூக்கத்தைக் குறைத்துக் கொண்டிருந்தாள், ஸ்ரீராமனுடைய சைன்யம் சேதுக்கடலைத் தாண்டியிருக்காது என்பார்கள். இரவும், பகலும் தூங்காமல் விழித்துக்கொண்டே நம்மைக் காவல் காக்கிறாள் மதுரை மீனாட்சி. அவளுக்கு மீனாட்சி என்ற பெயர் வந்ததற்குக் காரணமே அதுதான் என்கிறார் வாரியார் சுவாமிகள். மீன்போல் விழித்திருந்து அவள் ஆட்சி செய்வதால் அவள் மீனாட்சி. இதை எனது குருநாதர் வாரியார் சுவாமிகள் அழகாகச் சொல்லுவார்: "ஓடும் ரயிலில் இரண்டாயிரம் பேர் தூங்குகிறோம். இன்ஜின் டிரைவர் விழித்துக் கொண்டிருக்கிறார். அவரும் தூங்கிவிட்டால் இரண்டாயிரம் பேரும் என்ன ஆவது?"

"நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தாமும் கேட்டார்" என்று தம்பி கல்யாணசுந்தரம் பாடியிருக்கிறார்.

தூக்கம் ஒருவகை லயம், ஒரு வகைச் சுகம், ஈடு இணையில்லாத போகம்! நல்ல தூக்கம் ஒருவனுக்கு வருவது, அவன் செய்த தவம், அவன் பெற்ற வாரம்! ஆனால், கடமைகளை மறக்கடிக்கும் தூக்கம் போகமல்ல - ரோகம்.

காலை ஆறு மணிக்குத் திருமணம். மாப்பிள்ளை ஏழு மணிக்கு எழுந்திருந்தால், நேரம் காத்திருக்குமா? ஆகவே எந்தப் போகமும் அளவுக்குரியது.

ஒரு குறிப்பிட்ட வயது வரையில், குழந்தைக்குத் தூக்கம்தான் வளர்ச்சி. அந்த வயதுக்குப்பின், விழிப்புத்தான் வளர்ச்சி. நன்றாக வளர்ந்து, காக்கவேண்டியவர்களைக் காத்து, சேர்க்க வேண்டியவற்றைச் சேர்த்த பிற்பாடு தூக்கம் ஒரு யோகம். காக்கவேண்டிய காலத்தில் தூங்குவதே ரோகம். ஆனால், துர்ப்பாக்கியவசமாகத் தள்ளாடும் வயதில் எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டுத் தூங்கப் போகிறவனுக்குத் தூக்கம் வராது. ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் தூக்கம் குறையத் தொடங்கும். 'ஐயோ தூங்கமுடியவில்லையே' என்று கவலைப்பட்டுப் பயனில்லை. 'சுகபோகத்தை அனுபவிக்க வேண்டிய வயதில் அனுபவித்துத் தீர்த்துவிட்டோம்' அன்று ஆறுதலடைவதைத் தவிர வேறு வழியில்லை.

திருடர் பயம் நிறைந்த இடத்தில், விழுந்து விழுந்து தூங்கினால் நஷ்டம். ஆபத்தான நேரங்களில், தூக்கத்தை அறவே விளக்காவிட்டால் கஷ்டம். தவறினால், ஒரு போகம் பல ரோகங்களுக்குக் காரணமாகிவிடும்.

ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம்தான் தூங்குவான் அடால்ஃப் ஹிட்லர். அது அவனுக்குப் ஒதுமானதாக இருந்தது. மளமளவென்று வெற்றியையும் தேடித் தந்தது. ஒருநாள் நிம்மதியாகத் தூங்க விரும்பி, இரண்டு மாத்திரைகளைப் போட்டுக்கொண்டு தூங்கினான். அன்றைக்குத்தான், 'நார்மண்டி முற்றுகை' நடந்தது. ஐசன்ஹோவரும், சர்ச்சிலும் ஆயிரக்கணக்கான கப்பல்களைப் பிரஞ்சு நாட்டு 'நார்மண்டி' கடற்கரைக்கு அனுப்பி வெற்றி பெற்றுவிட்டார்கள். ஹிட்லரின் தோல்விக்கு அமெரிக்காவின் அணுகுண்டா காரணம்? இல்லை, ஹிட்லரின் தூக்கமே காரணம்! ஆகவே அனுபவத்தின் காரணமாகச் சொல்கிறேன்:

"அனுபவிப்பதை அளவோடு அனுபவியுங்கள். உண்பதில் நிதானம் - உடலுறவில் நிதானம் - உறங்குவதில் நிதானம் - தீயன பழகாமல் இருத்தல் - அளவான வாழ்க்கையிலேயே அதிகமாக உற்சாகத்தைக் காணுதல் - இப்படி வாழ்ந்தால் இறைவன் ஒத்துழைப்பான்.

- கண்ணதாசனின், "போகம், ரோகம், யோகம்"

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம், சென்னை.

நெல்லையப்பன் கவிதைகள்-35: "சிதைக்கவா, செதுக்கவா?"

பீடி வளிக்கலாம்
சிகரெட் புகைக்கலாம்
கஞ்சா அடிக்கலாம்
செல் பேசலாம்
ஒருபால் உறவு கொள்ளலாம்
பணம் இருந்தால் செய்யலாம்,
இவை அத்தனையும்.

குழம்ப வேண்டாம்
எங்கே என்று.
அதுதான் நம்
மத்திய சிறைச்சாலை!

சிறைச்சாலை
வருத்தவா? திருத்தவா?
பள்ளிக்கூடம்தான்!
படிப்பினை என்ன?

அம்மணப்படுத்தி
ஆளுமை சிதைத்து
மொட்டையடித்து
விகாரமாக்கி
ஒரு தப்பு செய்து மாட்டி
உள்ளே வந்தவனை,
பலவகை தப்பு
செய்தவருடன் பழகவிட்டு
தவறுகள் பல செய்ய
தயாரித்து
வெளியேவிடவா சிறைச்சாலை?

சிறைச்சாலையும்
தவச்சாலையாகலாம்,
இலக்கு என்ன
என்ற தெளிவு பிறந்தால்!

நலக்குறிப்புகள்-19: "திருநீற்றுப்பச்சிலை"

திருநீற்றுப்பச்சிலையை அரைத்து இரவில் கட்டியில் போட்டு வர கட்டிகள் உடையும்.

இலையை நுகர்ந்து தலையணை அடியில் வைத்துப் படுத்தால் தலைவலி போய், நன்கு தூக்கம் வரும்.

இலைச்சாற்றுடன் சம அளவு தேன் கலந்து பருகிவர, மார்புச்சளி, இருமல், மேல் சுவாசம், வயிற்று வாய்வுப் பிரச்னைகள் தீரும்.

இலையை வாட்டிப் பிழிந்து காதில் விட, காது நோய், காது மந்தம் தீரும்.

நன்றி: 'இயற்கை மருத்துவம்', ஆகஸ்ட் 2007 ( மதுரை தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்க வெளியீடு)