31 ஜூலை, 2009

திருவாசகம்-4:

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே! பல்வினைப்பட்டு
ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடுஉனக்குச் சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய் நீ அவலக் கடலாய வெள்ளத்தே.

தேவாரம்-10:

பெருகலாம் தவம் பேதைமை தீரலாம்
திருகலாகிய சிந்தை திருத்தலாம்
பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே.

- திருநாவுக்கரசர்

திருமந்திரம்-13: காயப்பை ஒன்று சரக்குப் பல உள

காயப்பை ஒன்று சரக்குப் பல உள
மாயப்பை ஒன்று உண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக்குள் நின்ற கள்வன் புறப்பட்டான்
மாயப்பை மன்னா மயங்கிய வாறே.

28 ஜூலை, 2009

எனக்குப் பிடித்த கவிதை-53: கவிஞர் சிற்பியின் கவிதை

எங்கள் பாப்பாக்கள் நீலமாய்ப் பிறக்குமுன்
புல்லிதழில் விஷமுத்துக்கள் வியர்க்குமுன்
செல்வப் பசுமடியில் மரணம் சுரக்குமுன்
அரும்பு உதடு பறிக்கும் பச்சைமண் முற்றத்தில்
தரிசுக் கோலமிடும்
அணு அபாயம் நிற்கட்டும்.

- கவிஞர் சிற்பி

நன்றி: கவிஞர் சிற்பி & முனைவர் சுபாசுவின் 'எது புதுக் கவிதை?"



திருவாசகம்-3:

யானே பொய் என் நெஞ்சம் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உன்னை வந்துறும் ஆறே.

தேவாரம்-9:

குருகாம் வயிரமாம் கூறும் நாளாம்
கொள்ளும் கிழமையாம் கோளேதானாம்
பருகா அமுதமாம் பாலில் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகால் உமையாளோர் பாகனுமாம்,
உள்நின்ற நாவிற்கு உரையாடியாம்
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண்ணாம்
கருகாவூர் எந்தைதானே.

- திருநாவுக்கரசர்

திருமந்திரம்-13: ஒன்றவன் தானே; இரண்டவன் இன்னருள்;...

ஒன்றவன் தானே; இரண்டவன் இன்னருள்;
நின்றனன் மூன்றினுள்; நான்கு உணர்ந்தான்;ஐந்து
வென்றனன்; ஆறு விரிந்தனன்; ஏழு உம்பர்ச்
சென்றனன்; தானிருந்தான் உணர்ந்து எட்டே.

26 ஜூலை, 2009

இன்றைய சிந்தனைக்கு-51:

ஆதரவில்லாதவர்கள் அனைவரும் அனாதைதான். அந்த வகையில் உண்மையும் ஒரு அனாதைதான் - நா.பா.

திருவாசகம்-2:

ஆடுகின்றிலை; கூத்துடை யான்கழற்கு அன்பிலை; என்புருகிப்
பாடுகின்றிலை; பதைப்பதும் செய்கிலை; பணிகிலை; பாதமலர்
சூடுகின்றிலை; சூட்டுகின்றதும் இல்லை; துணையிலி பிணநெஞ்சே
தேடுகின்றிலை; தெருவுதோறு அலறிலை; செய்வதொன்று அறியேனே!

தேவாரம்-8:

தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே.
- திருஞானசம்பந்தர்

திருமந்திரம்-12: எட்டி பழுத்தன இருங்கனி வீழ்ந்தன ...

எட்டி பழுத்தன இருங்கனி வீழ்ந்தன
ஒட்டிய நல்லறம் செய்யாதவர் செல்வம்
வட்டிகொண்டு ஈட்டியே மண்ணில் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன் அறியாரே.


எட்டி மரத்தில் பெரிய பழங்கள் காய்க்கும். ஆனால் அவற்றால் யாருக்கும் பயனில்லை. அதேபோல் வட்டி வாங்கிப் பிறர் பொருளைக் கவர்ந்து, அதைக் கொண்டு வாழும் வஞ்சகர்களாலும் யாருக்கும் பயனில்லை.

25 ஜூலை, 2009

எனக்குப் பிடித்த கவிதை-52: கவிஞர் முத்துலிங்கத்தின் "கழுதை"

எதுகை மோனை ஓசை நயங்கள்
இலங்கும் கவிதை இனிக்கும் - ஒரு
புதிய கருத்தும் அதற்குள் இருப்பின்
பொலியும் கவிதை நிலைக்கும்

இலக்க ணங்கள் இழந்த கவியை
சிலரின் இதயம் ரசிக்கும் - அது
கலக்கல் சரக்கைப் போல மதிப்பைக்
காலப் போக்கில் இழக்கும்

வரட்டுத் தனத்தில் பிறக்கும் கவிதை
மலட்டுத் தனத்தின் வடிவம் - அதில்
முரட்டுத் தனத்தில் வார்த்தை இருப்பின்
சிறப்புப் பெறுதல் கடினம்

கவிதை நயமும் கருத்தும் திகழும்
கவிதை உயர்ந்த கவிதை - இதில்
எதுவும் அற்றுத் திகழும் கவிதை
கவிதை யல்ல கழுதை!

"முத்துலிங்கம் கவிதைகள்"
212 பக்கங்கள், விலை ரூபாய் 90/-
திருவரசு புத்தக நிலையம்
23 (பழைய என் 13), தீனதயாளு தெரு
தி.நகர், சென்னை-600017

எனக்குப் பிடித்த கவிதை-51: கவிஞர் நா.காமராசனின் "யாத்திரைக்காரன்"

ஏடெடுத்து கவிஎழுதத் தாய் சுமந்தாள் - எனை
ஈன்றெடுத்துத் தாலாட்டிப் பால் கொடுத்தாள்
மூன்றெழுத்து படித்தவுடன் பாட்டெடுத்தேன் - என்
மூச்சு ஊஞ்சல் கவிசுமக்க நான் நடந்தேன்.
கூடு விட்டுக் கூடு பாய்ந்து போனதில்லை - நான்
கொள்கை விற்றுக் கோபுரத்தில் ஏறவில்லை!
கூட வந்து கொடி பிடிக்க யாருமில்லை
குடியிருக்க எனக்கு ஒரு வீடுமில்லை!
நாலு பக்கம்போன 'தெப்பம்' கரை ஏறவில்லை - என்
நாடகத்தில் மூடுதிரை .. சபை கூடவில்லை
தூரதூரம் நான் நடந்தேன் தொடுவானமில்லை - என்
ஆடுபுலி ஆட்டத்திலே கோடுமில்லை - நான்
வசந்தகாலப் பூக்களுக்கும் நிறம் எழுதும்
சித்திரக்காரன் - அடிமை
வாழ்வைவிட்டு வெளிநடப்பு செய்துவிட்ட
யாத்திரைக்காரன்!

கவிஞர் நா.காமராசனின் "காட்டுக்குறத்தி"
136 பக்கங்கள்
விலை ரூபாய் 38/-
திருமகள் நிலையம்
புதிய எண் 16, பழைய எண் 55
வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை ௬000௧௭
தொலைபேசி: 24342899

நன்றி: கவிஞர் நா.காமராசன் அவர்கள் & திருமகள் நிலையத்தார்

திருவாசகம்-1:

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை, என்சொல்லி வாழ்த்துவனே.

தேவாரம்-7:

மண்ணில் நல்ல வண்ணம் வாழலும் வைகலும்
எண்ணின் நல்ல கதிக்கியாதுமோர் குறைவிலைக்
கண்ணின் நல்லஃதுரும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

-திருஞானசம்பந்தர்

திருமந்திரம்-11: மந்திரம் ஆவதும் மாமருந்து ஆவதும்...

மந்திரம் ஆவதும் மாமருந்து ஆவதும்
தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும்
சுந்தரம் ஆவதும் தூய்நெறி ஆவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே.

24 ஜூலை, 2009

கற்பனைச் சிறகுகள்-1: "வாடகை வீடு"

"ஆத்மபாலன், ஆத்மபாலன்!"

யார் அழைப்பது? பெரும்பாலும் என்னை "பாலு" அல்லது "பாலன்" என்றுதான் அழைப்பார்கள். எங்கள் வீட்டுக்காரர் ஒருவர்தான் என்னை முழுப்பெயர் சொல்லி அழைப்பவர்.

மாடியிலிருந்து மாயா டீச்சர் எட்டிபபார்த்துவிட்டு, அதை உறுதி செய்யும் வண்ணம், "சார், வீட்டுக்காரர்! ஜாக்கிரதை!" என்று சொல்லிவிட்டு மாயமானார்.

வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் படும் பாடு சொல்லி முடியாது. வீட்டுக்காரர் அடிக்கடி வீட்டு வாடகையை உயர்த்துவது, அல்லது வீட்டைக் காலி செய் என்று உயிரை எடுப்பது அல்லது வீட்டை நன்றாக வைத்துக் கொள்ளவில்லை குறைகூறுவது என்று பலப் பல தொல்லைகள். ஆனால் எங்கள் வீட்டுக்காரர் அப்படியெல்லாம் தொல்லை கொடுத்தது இல்லை. அறுபது ஆண்டுகளாய் இந்த வீட்டில் வசித்து வருகிறேன். சிறு சிறு தொல்லைகள் உண்டு. ஆனால் காலி பண்ணு, வாடகை அதிகம் கொடு என்று தொல்லை பண்ணியதில்லை. அப்படி இருந்தவர் அண்மையில் சில காலமாக வீட்டைக் காலி பண்ணச் சொல்லி தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

எங்கள் வீட்டின் ஒரு புற மாடியில் என்னுடைய இரட்டைப் பிறவி (ஒரு சில விநாடிகள் முன் பிறந்ததால், அண்ணன்) ஆத்மநாதனும், இன்னொரு மாடியில் இன்னொரு ஒண்டிக் குடித்தனமாக ஒரு டீச்சரும் இருந்தார்.

மெதுவாக வாசல் கதவைத் திறந்து, "வாங்க சார், வாங்க! என்ன அடிக்கடி வர ஆரம்பித்துவிட்டீர்கள்" என்றேன்.

அதற்குப் பதில் சொல்லாமல், மேலும் கீழும் பார்த்துவிட்டு, அடுத்து அவர் என்ன சொல்வார் என்று நான் நினைத்தேனோ அதையே சொன்னார்.

"என்னப்பா! வீட்டைக் குப்பைத்தொட்டி மாதிரி வச்சிருக்கே! அழுக்கடைந்து, துர்நாற்றம் எடுக்குது! இப்படிச் சிதைந்து போய் இருக்கு! கண்டுகொள்ளாமல் இருக்கியே? இப்படியே விட்டு விட்டால் வீடு தானே படுத்து விடும் போல் இருக்கே!"

இதில் சிக்கல் என்னவென்றால் ஆரம்பத்திலேயே பராமரிப்புச் செலவை என்தலையில் கட்டி விட்டார். நானும் அப்போது அதை ஏற்றுக் கொண்டேன். பராமரிப்பு என்னுடைய பொறுப்பாகையால் என்னால் பதில் பேச முடியவில்லை. இருந்தாலும், விடாமல், நீங்கள் கொடுத்த வீட்டை எப்படியெல்லாம் மேம்படுத்தி, எப்படியெல்லாம் வசதி படுத்தியிருக்கிறேன். அப்போதெல்லாம் சந்தோஷப்பட்ட நீங்கள் இப்போது குறைகூறுகிறீர்கள். இது நியாயமா என்றேன்.

"புத்தம் புது வீடாக உன்னிடம் கொடுத்தேன். ஆரம்பத்தில் ஒழுங்காய்த்தான் வைத்திருந்தாய். ஆனால் சில ஆண்டுகளாக கண்டுகொள்வதேயில்லை. தற்போது பழுது பார்க்கும் நிலையையும் தாண்டி, இடித்து புதிதாகக் கட்டவேண்டிய நிலைக்கு கொண்டுவந்துவிட்டாய். எனவேதான் சொல்கிறேன், வீட்டைக் காலி பண்ணு!"

"வீட்டை இடித்து புதிதாகக் கட்டும் வரை நான் எங்கே போவது? வீடு கிடைப்பது எவ்வளவு சிரமம் என்று உங்களுக்குத் தெரியுமா?"

"வேண்டுமானால் கீழூரில் எனக்கு ஒரு சிறு வீடு இருக்கிறது. தாற்காலிகமாக அங்கே போய் இரு. புது வீடு கட்டி முடித்தபின் மறுபடியும் இங்கே வந்து விடலாம்."

அவர் சொல்லும் வீட்டை டீச்சருக்குத் தெரியும். ஆறடிக்கு இரண்டடி வீடு. போய் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று எனக்கு ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தார்.

"அந்தப் பேச்சே வேண்டாம்" என்றேன் நான்.

"இல்லையென்றால் மேலூரில் ஒரு வீடு இருக்கிறது. அங்கே போகிறாயா?"

"முடியவே முடியாது. இந்த ஊரில் நான் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. அங்கே போனால் இங்கே வேலைகள் கெட்டுவிடும்"

"உன் அண்ணன் எதிலும் பட்டுக் கொள்ளாமல் ஒரு சாமியார் மாதிரி இருக்கிறான். இந்த மாயா டீச்சர் வாடகையும் கொடுப்பதில்லை. உன்னை எனக்கு எதிராக திருப்பி, உனக்கு துர்போதனை வேறு செய்கிறாள். நான் வந்தால் எங்காவது ஓடி ஒழிந்து கொள்கிறாள். அவளை என்னைக் கேட்காமல் ஒண்டிக் குடித்தனம் வைத்ததும் நீதான்."

"என்னைக் குற்றம் சொல்வதை விடுங்கள் . என்னால் தற்போது வீட்டைக் காலி செய்ய முடியாது . எனக்கு அவகாசம் வேண்டும்."

"எவ்வளவு நாள் அவகாசம் என்பதையாவது சொல்லு"

"அதெல்லாம் என்னால் சொல்ல முடியாது. காலி செய்துவிடுவேன். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்."

"நான் இப்படியே வெறும் பேச்சோடு நின்றுவிடுவேன் என்று எண்ணாதே. என்னால் உன்னை வீட்டைக் காலிபண்ணவைக்க முடியும். அந்த நிலைக்கு என்னை ஆளாக்கி விடாதே" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அவர் அகன்றததுதான் தாமதம், "அவர் பேசியது அனைத்தையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். பிடி கொடுக்காதீர்கள். அவரால் ஒன்றும் செய்ய முடியாது இப்படியே காலத்தை ஓட்டிவிடலாம்" என்றபடி வந்தார் மாயா டீச்சர்.

அடுத்த முறை வரும்போது வீட்டுக்காரருக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். உங்களிடம் நல்ல ஐடியா ஏதாவது இருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.

15 ஜூலை, 2009

இன்று ஒரு தகவல்-23: "பசித்திரு, நீண்ட நாள் வாழலாம்!"

அமெரிக்காவில் விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் இருபது வருட ஆராய்ச்சிக்குப் பின் ஒரு உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பசியோடிருப்பது ஆயுளை நீட்டிக்கும். குரங்குகளிடம் இருபது ஆண்டுகளாக நடத்திய ஆராய்ச்சிக்குப் பின், கண்டறிந்த உண்மை இது.

வள்ளலார் 'பசித்திரு', 'தனித்திரு', 'விழித்திரு' என்று சொன்னதில் பல உட்கருத்துக்கள் இருப்பதாகக் கூறுவார் ஆன்றோர். பசி கொல்லாமையின் மேன்மை பற்றி அவர் பல இடங்களில் கூறியிருக்கிறார். குறிப்பாக ஆன்மிக வாழ்வில் ஈடுபட விரும்புவோர் கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்று இது. பசித்திருப்பது நீண்ட நாள் வாழ வழி வகுக்கும். வயிறு முட்ட உண்பது நோய்க்கு வழி வகுக்கும் என்று இயற்கை மருத்துவமும் கூறுகிறது. ஆரோக்கியமாக வாழ விரும்பும் அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டிய உண்மை இது.

11 ஜூலை, 2009

நினைத்துப் பார்க்கிறேன்-7: "சாருமுகம்"

நெல்லையில் நான் பதினோராம் வகுப்பு படிக்கையில் அறிமுகமானான் ஆறுமுகம். எனக்கு இரண்டு-மூன்று வயது இளையவன் என்று நினைக்கிறேன். அவன் எங்கள் பள்ளியில் எட்டாவதோ, ஒன்பதாவதோ படித்துக் கொண்டிருந்தான். அது மட்டுமல்ல, என் வீட்டிற்கு அருகில், எதிர் வரிசையில் அவன் வீடு. அப்போது அவன் பெற்றோருக்கு அவன் ஒரே பிள்ளை. (பல வருடங்கள் கழித்து அவனுக்குத் தம்பி பிறந்ததாகக் கேள்விப்பட்டேன். ஆனால் நான் அவனைப் பார்த்ததில்லை).

நாங்கள் இருவரும் 'புத்தகப் பைத்தியங்கள்'. அப்போது நான் 'அமுதம்' என்ற பெயரில் ஒரு கையெழுத்து இதழை நடத்திக் கொண்டிருந்தேன். அதில் எனக்கு அவன் உறுதுணை. நாங்கள் இருவரும் எழுதுவோம். நண்பர்களிடம் படிக்கக் கொடுப்போம். 'சாருமுகம்' என்ற புனைப்பெயரில் எழுதுவான் அவன். (அவனது பெயர் எஸ்.ஆறுமுகம்). ஓராண்டிலேயே நாங்கள் பிரிய நேரிட்டது. இரயில்வேயில் வேலை பார்த்துவந்த என் அப்பாவிற்கு மாற்றலாகி நாங்கள் மானாமதுரை சென்று விட்டோம். இருப்பினும் உறவினர்களைப் பார்க்க நான் நெல்லை வரும்போதெல்லாம் அவனைப் பார்ப்பேன். நாளடைவில் அதுவும் இல்லாமல் போனது.

நான் காரைக்குடியில் வேலைக்குச் சேர்ந்து காரைக்குடி வந்துவிட்டேன். அவன் தமிழக அரசின் வருவாய்த்துறையில் செங்கோட்டையில் வேலை பார்ப்பதாகக் கேள்விப்பட்டேன்.

திடீரென்று ஒருநாள் அவனிடமிருந்து கடிதம் வந்தது. என் உறவினர்களிடமிருந்து என் முகவரியைப் பெற்று எனக்கு எழுதியிருந்தான். எனக்கு 'இலக்கிய தாகத்தையும், எழுத்தார்வத்தையும் ஊட்டியவன் நீ" என்றெல்லாம் எழுதியிருந்தான். மகிழ்ச்சியாக இருந்தது. பதவி உயர்வு பெற்று மதுரையில் இருப்பதாக அறிந்து, ஒரு முறை அவன் வீட்டிற்குச் சென்று அவனைப் பார்த்தேன். அவனது துணைவியையும், மகளையும் அறிமுகப் படுத்தி வைத்தான்.

அதன் பிறகு ஓரிரு கடிதப் பரிமாற்றங்கள். அப்புறம் மறுபடியும் தொடர்பு விட்டுப்போனது.

பல ஆண்டுகள் கழித்து ஒரு நாள் இரவு அமெரிக்காவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. ஆறுமுகத்தின் மகள் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு என் அலுவலகம் தொடர்பாக தகவல் கேட்டாள் ஒரு பெண். அப்போது பேச்சோடு பேச்சாக, "மாமா, அப்பா தற்போது இல்லை, தெரியுமா?" என்றாள். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. "என்னம்மா, சொல்கிறாய்?" என்றேன் அதிர்ச்சியோடு. சில ஆண்டுகளுக்கு முன் ஓரிரவு மாரடைப்பால் திடீரென ஆறுமுகம் மறைந்ததை தெரிவித்தாள் அவள். (அதன் பின்னர் திருமணம் நடந்து, அவன் தன் கணவருடன் அமெரிக்கா சென்றிருக்கவேண்டும்.) எனது வேதனையை அவளிடம் தெரிவித்தேன். அன்றிரவு முழுவதும் அவனைப் பற்றிய நினைப்பும், வருத்தமும்தான். அதன் பிறகு அவனைப் பற்றி நினைக்க வாய்ப்பே இல்லாமல் போனது.

என்னுடைய இள வயதிலோ, பள்ளிப்பருவத்திலோ நடந்த எதுவுமே நினைத்துப் பார்க்கக் கூடியதாகவோ, பெருமைப் படக்கூடியதாகவோ இல்லை என்றெண்ணியிருந்தேன். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் திடீரென அவன் நினைவு வர, அந்த நாட்களை நினைந்து, அந்த நினைவுகளை வேதனையுடன் இங்கே பதிவு செய்கிறேன்.

8 ஜூலை, 2009

நினைத்துப் பார்க்கிறேன்-7: "அரவணைத்தல்"

பல ஆண்டுகளுக்கு முன், உலோக அரிமானத் தடுப்புப் பிரிவில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய மேஜையின் மேல் கண்ணாடிக்கடியில், ஒரு படம் வைத்திருந்தேன். மறக்க முடியாத படம் அது. ஒரு அழகான சிறுவன்; அவனைச் சுற்றிலும் ஐந்தாறு அழகான நாய்க்குட்டிகள். அவை அனைத்தும் அவன்மேல் விழுந்து, விழுந்து செல்லமாக முத்தமிட்டுக் கொண்டிருக்கும். அந்தச் சிறுவனோ முகமெல்லாம் மலர்ந்து, ஆனந்தத்தின் உச்சியில். அதன் கீழோ ஒரு அருமையான வாசகம்: "உங்களுக்குப் பிரியமானவர்களிடம் அன்பை வெளிக்காடுங்கள்."

அன்பை வெளிக்காட்டுதல் பலகீனம் என்று சிலர் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. குறிப்பாக உங்கள் குழந்தைகளிடம் அன்பை வெளிக்காட்டத் தயங்காதீர்கள். அதே நேரத்தில் குழந்தைகளை செல்லம் கொடுத்துக் கெடுக்கவும் வேண்டாம்.

இன்றைய மனோதத்துவ நிபுணர்கள் இதை உறுதிப்படுத்துகிறார்கள். (Hug Your Children - That is what they recommend. There is an interesting article on that topic in IndiaPrenting.com). எல்லோருமே நேசிக்கப்பட விரும்புகிறார்கள். அதிலும் அவர்களுக்குப் பிரியமானவர்கள் அன்பை வெளிக்காட்டும்போது அது அவர்களுக்கு ஒரு டானிக்காகச் செயல்படுகிறது. குழந்தைகளுக்கு இது மிக அவசியம் - அவர்கள் தன்னம்பிக்கை உள்ளவர்களாக, சாதனையாளர்களாக உருவெடுக்க.

தாயின் அரவணைப்பின் பெருமையை சொல்ல வேண்டியதே இல்லை. தாயின் அன்பு, அரவணைப்பு சரியாகக் கிடைக்காத குழந்தைகள் தன்னம்பிக்கை இல்லாதவர்களாக, ஏக்கம் கொண்டவர்களாக, மனதளவில் குறைபாடுடைய குழந்தைகளாக வளருகிறார்கள். இந்த பாதிப்பு அவர்கள் பெரியவர்கள் ஆன பிறகும்கூட தொடர்கிறது.

அரவணைப்பு - என்னவொரு அருமையான சொல்! அரவம் + அணைப்பு. அரவம் என்றால் நீங்கள் அறியாதது அல்ல; பாம்பு. பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து விளையாடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். தாயின் அரவணைப்பு என்ற தொடரின் முழுப் பொருள் தற்போது புரிந்திருக்கும்.

பெரியவர்களுக்கும்கூட இது தேவைப்படுகிறது. மேலைநாடுகளில் பொது இடங்களிலும் சரி, வீடுகளிலும் சரி ஒருவரையொருவர் கட்டித் தழுவதல், முத்தமிடுதல் என்பது சாதாரணம்.

மீண்டும் சொல்கிறேன். அன்பை வெளிக்காட்டுதல் பலகீனத்தின் அடையாளமல்ல; வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அன்பை வெளிப்படுத்துங்கள், அனைவரிடமும், குறிப்பாக குழந்தைகளிடம்.

அன்பைவிட உலகில் பெரியது எதுவுமில்லை. (Love is the gretest thing in the world).

1 ஜூலை, 2009

நினைத்துப் பார்க்கிறேன்-5: "ஜாம் அப்துல்காதர்"

இன்று அதிகாலை திடீரென்று 'ஜாம் அப்துல் காதர்' நினைவு வந்தது. எனக்கே ஏன் என்று புரியவில்லை. நம் மனம் ஆடும் சித்து விளையாட்டு இது. நம் வாழ்க்கையில் எண்ணற்ற மனிதர்களைச் சந்திக்கிறோம்; பலரை விரைவில் மறந்து விடுகிறோம். தொடர்பே இல்லாமல் திடீரென்று யாரைப் பற்றியாவது அல்லது ஏதாவது ஒன்றைப்பற்றி நினைவு வருகிறது; இது ஏன் என்று நமக்குத் தெரிவதில்லை.

அவர் எங்கள் நிறுவனத்தின் ஒய்வு பெற்ற விஞ்ஞானி. சென்ற மாதம் காலமானார். அவருடைய 'இனிஷியல்ஸ்' ஜே..எம் (அதனால் அவர் 'ஜாம்' ஆனார்). ஒரு காலத்தில் நான் அவருடன் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் எங்களுக்குள் அவ்வளவு பழக்கமில்லை. இஸ்லாத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் ஈடுபாடும் உடையவர். அதன் கொள்கைகளை உண்மையாகப் பின்பற்றும் ஆர்வமுள்ளவர். உதாரணமாக வட்டி வாங்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். எங்கள் பிரிவில் அனைத்து ஊழியர்களும் மாதா மாதம் சிறு தொகை முதலீடு செய்து மொத்தத் தொகையிலிருந்து குறைந்த வட்டிக்கு பணம் பெற்றுக் கொள்வோம். சுருக்கமாகச் சொன்னால் அது எங்களுடைய பரஸ்பர நிதி உதவி நிறுவனம். எல்லோரும் உறுப்பினராகும்போது, தான் மட்டும் ஒதுங்கியிருந்தால் சரியில்லை என்பதற்காக அவரும் உறுப்பினராகச் சேர்ந்தார். அவரைப் போன்ற பலருக்கும் அது ஒரு முதலீடு மட்டுமே. ஆனால் என்னைப்போன்றவர்களுக்கு அவசரத்திற்கு குறைந்த வட்டிக்கு கடன் வழங்கும் வங்கி. ஆண்டிறுதியில் வட்டியில் வந்த லாபத்தை அனைவருக்கும் சம பங்காகப் பிரித்துக் கொடுப்பார்கள். ஆனால் அப்துல் காதர் மட்டும் அதை வாங்க மாட்டார். பின்னர் அதுபோன்ற ஒரு அமைப்பில் உறுப்பினராக இருப்பதே சரியில்லை என்று விலகிவிட்டார்.

மனித மேம்பாட்டு அறிவியல் அமைப்பின் சார்பாக ஆங்கிலத்தில் ஒரு இதழும், தமிழில் ஒரு இதழும் நடத்தி வந்தேன். அவற்றை படித்த பிறகு என்மேல் அவருக்கு ஒரு ஈடுபாடு ஏற்பட்டது. மேலும் ஹோமியோபதி மருத்துவத்தை ஆழமாகப் பயின்று, ஒரு காலத்தில் அதைச் சேவையாக, என்னை நாடிவருவோர்க்கு என்னால் முடிந்த உதவியாகச் செய்திருக்கிறேன்.

அந்தக் கால கட்டத்தில் அவருடைய உறவினர் ஒருவர் சளி மற்றும் அதனால் வரும் தலைவலியினால் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். எத்தனையோ சிகிச்சை அளித்தும் திருப்தியில்லை. எங்கேயோ என்னைப்பற்றி கேள்விப்பட்டு என்னிடம் வந்தார். குறிகளின் அடிப்படையில் அவருக்கு 'காலி பைக்ரோமிகம்' என்ற மருந்தைத் தர நல்ல குணம் கிடைத்தது. இது அப்துல் காதருக்குத் தெரியும். பின்னர் அவரது இன்னொரு உறவினருக்கு இருதயத்தில் பிரச்னை, அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறப்பட்டபோது, அவரை என்னிடம் அழைத்து வந்தார். ஹோமியோபதியைப் பற்றி என்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார். நானும் அனைத்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் கூறினேன். பின்னர் மருந்தை ஏற்க முடிவு செய்தார். குறிகளின் அடிப்படையில் 'பிரையோனியா' என்ற மருந்தைக் கொடுத்தேன். இரண்டு அல்லது மூன்று மாதம் கழித்து மருத்துவ பரிசோதனைக்குச் சென்றபோது, அதே மருத்துவர் அவருக்கு எதுவுமில்லை, அறுவை சிகிச்சைக்கு அவசியமுமில்லை என்றபின், என்மேல் அவரது மதிப்பு, மரியாதை இன்னும் கூடியது.

என் வீட்டில் நான் வைத்திருந்த புத்தகங்களையெல்லாம் நோக்குவார். சிலவற்றை எடுத்துப் படிப்பார். எனக்கும் ஆழமான ஆன்மிக ஈடுபாடு இருப்பது கண்டு, மகிழ்ச்சியுடன் ஆன்மிக விஷயங்களைப் பேசுவார். இராமகிருஷ்ணரை இஷ்ட தெய்வமாகக் கொண்ட எனக்கு, அனைத்து மதங்களுக்கும் பொதுவான, அடிப்படையான மேன்மையான விஷயங்களைப் பற்றிப் பேசுவது விருப்பமான ஒன்று. ஆன்மிக வழியில் செல்லவிரும்புவோர்க்கான கையேடு ஒன்றை கேட்டு வாங்கிப் போனார். அந்தப் புத்தகம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. என்னிடம் இரண்டு பிரதி இருந்ததால் அதை அவரையே வைத்துக் கொள்ளச் சொன்னேன். அப்போதுகூட அவருக்குத் தயக்கம்தான்; யாரிடமும் எதையும் இலவசமாகப் பெற விரும்பாதவர்.

இணை இயக்குனராக ஓய்வு பெற்று, அவர் சொந்த ஊரில் முற்றிலும் சேவை நோக்கில் ஒரு பெரிய லட்சியப் பள்ளிக்கூடமொன்றை கட்டி, நிர்வகித்து வந்தார். அதன் துவக்க விழாவிற்கு என்னையும் அழைத்திருந்தார். என்னால் செல்ல முடியவில்லை.

சென்ற மாதம் நான் சென்னையிலிருந்த போது அவர் இறந்துவிட்டார். காரைக்குடி திரும்பியதும் நண்பர் ஒருவர் அப்துல் காதரின் மறைவு பற்றிக் கூறியபோது வருத்தமாக இருந்தது. ஆனால் அத்தோடு அதை மறந்துவிட்டேன். ஆனால் இன்று மாலை என்னமோ அவர் நினைவு வந்தது. ஏனென்று தெரியவில்லை. எளிமையான, கொள்கைப்பிடிப்பான, அந்த லட்சிய மனிதரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.