26 அக்., 2009

இன்று படித்தவை-11: அக்டோபர் 25, 2009: "பி.எஸ்.ராமையா" (B.S.Ramaiah)

11. பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன் அவர்கள் எழுதிய "பி.எஸ்.ராமையா" - சாகித்ய அகாதெமியின் "இந்திய இலக்கியச் சிற்பிகள்" வரிசையில் வெளியிடப்பட்ட நூல். - 125 பக்கங்கள் - விலை 25/-

இந்நூல் இதை எழுதிய பேராசிரியர் பழனி இராகுலதாசன் அவர்களால் அன்புடன் எனக்கு வழங்கப்பட்டது. ("மதிப்பிற்குரிய சூரி அவர்களுக்கு, அன்புடன், மு.பழனி இராகுலதாசன் 19.10.06)

மூன்றாண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டபின் தற்போதுதான் இதைப் படிக்க முடிந்தது. படித்து முடித்தபின் இதன் ஆசிரியரைப் போலவே நானும் வியப்படைந்தேன்: " இந்த ராமையா இவ்வளவு பெரிய மனிதரா?! இவரை ஏன் தமிழுலகம் கண்டுகொள்ளவில்லை?" சில காரணங்களை என்னால் ஊகிக்க முடிந்தது. அவற்றில் ஒன்றிரண்டை வெளிப்படையாகச் சொன்னால் உதை விழும். அவை இருந்துவிட்டுப் போகட்டும்.

வத்தலகுண்டில் 1905 ஆம் ஆண்டில் மார்ச் 24 ஆம் நாளன்று பிறந்தார். இந்த ஊரில் பிறந்த மற்ற புகழ் பெற்றவர்கள்: சிருங்கேரி பரமாச்சாரியார் ஒருவர், "கமலாம்பாள் சரித்திரம்" எழுதிய பி.ஆர்.ராஜம் ஐயர், வடமொழி வல்லுநர் பி.வி.காமேஸ்வர ஐயர், விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா.

சிறுவயதிலேயே அவர் நெஞ்சில் தேசிய விதை ஊன்றிவிட்டது. அடுத்து எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணம். அவரது வாழ்க்கையில் இந்த இரண்டுமே முக்கிய இடத்தைப் பிடித்தன. விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு பல முறை சிறை சென்றது, ஊர் ஊராக கதர்த்துணியை விற்றது, காங்கிரஸின் சேவாதள பயிற்சியில் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் சேவாதளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டது, பல முக்கிய தலைவர்களோடு தொடர்பு ஏற்பட்டது போன்றவை அவரது தேசிய எண்ணங்களின் வெளிப்பாடு. "காந்தி", "ஜெயக்கொடி", ஆனந்த விகடன், கல்கி, தினமணிக்கதிர், குமுதம், மணிக்கொடி போன்ற இதழ்களில் சிறுகதைகள் எழுதியது, பிரேமஹாரம், தினை விதைத்தவன், நந்தாவிளக்கு, சந்தைப்பேட்டை போன்ற நாவல்களை எழுதியது, எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களது 'சேவா ஸ்டேஜ்' நாடகக் குழுவிற்காக 'பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்', 'தேரோட்டி மகன்', 'போலீஸ்காரன் மகள்', 'பூவிலங்கு', 'மல்லியம் மங்களம்', 'பாஞ்சாலி சபதம்' போன்ற நாடகங்களை எழுதியது, 'பூலோக ரம்பை', 'மணிமேகலை', 'மதன காமராஜன்', 'பக்த நாரதர்', 'குபேர குசேலா', 'பரஞ்சோதி' போன்ற படங்களுக்கு திரைவசனம் எழுதியது அல்லது திரைவசனம் மற்றும் திரைக்கதையை ஒழுங்கு செய்தது போன்றவை அவரது எழுத்துத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு. சி.சு.செல்லப்பா அவர்கள் ராமையா அவர்கள் எழுதிய சிறுகதைகளின் எண்ணிக்கை 304 என்று குறிப்பிடுகிறார். அவரது கதைகளில் வடிவத்தைவிட உள்ளடக்கத்திற்கே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக சி.சு.செல்லப்பா அவர்கள் கூறியுள்ளார். அவரது சிறுகதைகளில் 'மலரும் மணமும்', 'குஞ்சிதபாதம்', 'பதச்சோறு' ஆகியவை மிகச் சிறந்தவையாகக் கருதப்படுகிறது.

அவருடைய படைப்புகளில் காந்தீய சிந்தனைகள் இழையோடி இருப்பதைப் பார்க்கலாம்.

அவருடைய மிகச் சிறந்த இலக்கிய சேவை 'மணிக்கொடி' இதழை சிறப்பாக நடத்த கடுமையாக உழைத்தது, அதற்காக பல இன்னல்களை அனுபவித்தது, வறுமையில் உழன்றது; இரண்டாம் மணிக்கொடியை 'சிறுகதைக்கான இதழாக நடத்தியது. இன்று தமிழ் சிறுகதையின் வரலாற்றை கூறுபவர் அனைவருமே 'மணிக்கொடியின்' ஒப்பற்ற பங்களிப்பைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. 'புதுமைப்பித்தன்', 'கு.ப.ரா', 'ந.பிச்சமூர்த்தி' போன்ற பல எழுத்தாளர்களை வளர்த்தது மணிக்கொடி.

தனது மணிக்கொடி அனுபவத்தை 'மணிக்கொடிக்காலம்' என்ற நூலாக வடித்தார்; அதற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது.

தன்னலமற்ற மேன்மையான மனிதர், அனைவரிடமும் அன்பு காட்டிய அருமையான மனிதர், எப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும் தன்னம்பிக்கையும், தைரியத்தையும், உற்சாகத்தையும் கைவிடாதவர்.

பாரதியும், வ.வே.சு. ஐயரும் ராமையாவின் மனப்போக்கை உருவாக்கியவர்கள் என்பார் கே.எஸ்.ராமச்சந்திரன். அவர்கள் வழி வந்த ராமையாவிற்கு நிகழ்காலச் சமூக நிகழ்வுகள் மீது சினம் வந்தது; சீற்றம் வந்தது. எனினும் எதிர்காலத்தின் மீது ஆத்மார்த்தமானதும், ஆவேசமானதுமான ஓர் நம்பிக்கையும் உறைந்து கிடந்தது என்கிறார் ஆசிரியர்.

பள்ளிப்பருவத்தில் விடுமுறையில் என் அத்தை வீட்டிற்குச் சென்றிருந்தபோது அங்கே ராமையா அவர்களது நூல்கள் பலவற்றைக் கண்டிருக்கிறேன். அநேகமாக எனது மாமா அவர்கள் வாங்கி வைத்திருந்திருக்கலாம். அவற்றில் 'தேரோட்டி மகன்', 'பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்' ஆகியவற்றைப் படித்திருக்கிறேன். பின்னர் 'பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்', 'போலீஸ்காரன் மகள்' ஆகிய சினிமாக்களையும் பார்த்திருக்கிறேன்.

தனது 'களப்பலி' என்ற நாடகத்தில் கதாபாத்திரங்கள் மூலம் அவர் எழுப்பும் வினாக்கள் நாம் சிந்திக்க வேண்டியவையாக இருக்கின்றன: தியாகத்தின் விளைவாகப் பாரத நாட்டு மக்கள் பெருவாழ்வு பெறப்போகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அந்த வாழ்வு என்ன விலை கொடுத்துப் பெற்றது என்பது தெரிந்திருக்குமா? விடுதலைக்குப் பிறகு மக்களின் நிலை என்னவாக இருக்கும்? காந்திய நெறியை, சுதந்திரத்தின் மாண்பை மக்கன் உணர்வார்களா?

ராமையா அவர்களது மணிவிழா சென்னையில் 1965 ஆம் ஆண்டு சிறப்பாக நடந்தது. மணிவிழாக் குழுவில் பெரிய பெரிய எழுத்தாளர்கள், திரைத்துறையைச் சார்ந்த முக்கியமான பலரும் இடம் பெற்றிருந்தனர்.

ராமையா அவர்கள் தொண்டைப் புற்றுநோயால் தனது 78 ஆம் வயதில் 18.5.1983 அன்று மறைந்தார்.

பல நல்ல தகவல்களுடன் இந்நூலை சுவைபட எழுதிய பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். அனைவரும் படிக்க வேண்டிய ஒரு ஒப்பற்ற நூல் இது.

நான் அடுத்து செய்யவேண்டியவை என்று கருதுவது ராமையா அவர்களது நூல்களை, குறிப்பாக 'மனிகொடிக் காலத்தைப்' படிக்கவேண்டும்; வத்தலகுண்டிற்கு ஒரு முறை சென்று வரவேண்டும்.

24 அக்., 2009

இன்று படித்தவை-10: அக்டோபர் 24, 2009

10. "புதிய தலைமுறை", வார இதழ், இதழ் நான்கு, மலர் ஒன்று, அக்டோபர் 29, 2009. (ஆர்ட் பேப்பரில் வண்ணப்படங்களுடன் 64 பக்கங்கள் - விலை ரூபாய் ஐந்து! )

நேர்த்தியான கெட்-அப். நம்பமுடியாத விலை. பயனுள்ள பல விஷயங்கள். இதன் ஆசிரியர் திரு மாலன் அவர்கள். (காரைக்குடி புத்தகத் திருவிழாவைத் துவக்கி வைக்க ஒரு வருடம் இவரை அழைத்து வந்தது, அவரது இனிய உரையைக் கேட்டு மகிழ்ந்தது, மதிய உணவு அவரோடு ஒரே மேஜையில் உண்டது அனைத்தும் நினைவிற்கு வருகிறது) இளைய தலைமுறைக்கான இதழ் என்ற போதும், என்னால் விரும்பிப் படிக்க முடிந்தது. பல பிடித்தமான விஷயங்கள்:

ரமேஷ் பிரபாவின் எப்படி ஜெயித்தார்கள்? 'கவின்கேர்' ரங்கநாதன் அவர்களின் சாதனை வரலாறு.


வறுமையை வென்றவர்: கர்ணாவின் 'உண்மையான கனவு தன்னைத் தானே நிறைவேற்றிக் கொள்ளும்' - 'ஃபுட் கிங் கேட்டரிங் சர்வீஸ்' நிர்வாக இயக்குனர், சரத்பாபு அவர்களது சாதனை வரலாறு. அவரது வெற்றி விதிகள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை:

லட்சியத்தில் தெளிவு
எப்போதும் அது குறித்த நினைப்பு
நூறு சத்தம் ஈடுபாடு
சரியான திட்டம்
கடும் உழைப்பு
யாருக்கும் கெடுதல் செய்யாத நல்லெண்ணம்

அடுத்து...

முனைவர் அப்துல் கலாம் அவர்களின் தொடர் கட்டுரை 'இளைய இந்தியா 2020' : அறிவியலும் ஆன்மீகமும் இணையும் போது..

விழிப்புணர்வு கொண்ட சமூகத்தின் மூன்று அங்கங்கள்:

நற்சிந்தனைகளை உள்ளடக்கிய கல்வி
ஆன்மீக உணர்வாக மாற்றமடையும் மதம்
சமூக மாற்றத்திற்கான பொருளாதார வளர்ச்சி

அற்புதமான கட்டுரை. இளைஞர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் அவசியம் படிக்கவேண்டியது.

திரு வெ.இறையன்பு அவர்களின் தொடர் கட்டுரை: "பத்தாயிரம் மைல் பயணம்"

இன்றைய நவீன விளையாட்டுக்கள் பலவற்றின் சுவையான வரலாறு.

பழைய இதழ்களையும் தேடி வாங்கிப் படிக்க வேண்டும்.

இன்று படித்தவை-9: அக்டோபர் 24, 2009

9. குமுதம், தீபாவளி மலர் நான்கு, அக்டோபர் 21, 2009. (இண்டர்நேஷனல் ஸ்பெஷல்)

சஞ்சிகைகளைப் படிக்கும் என்னிடம் குறைந்துகொண்டே வருகிறது. முக்கிய காரணம் எங்கு பார்த்தாலும் சினிமா, சினிமா - அதைத் தவிர வேறில்லை. நான் மிகவும் மதித்த ஆனந்த விகடன் போன்ற இதழ்கள் கூட விதிவிலக்கில்லாமல் போனதை எண்ணி வருந்தியிருக்கிறேன். அல்லது உருப்படாத அரசியல்.

இன்று ஏதோ புரட்டிப் பார்க்கலாம் என்று தோன்ற, குமுதம் 'இண்டர்நேஷனல் சிறப்பிதழை' எடுத்தேன். புரட்டிக்கொண்டே வந்தவன் படிக்க ஆரம்பித்துவிட்டேன். நான் விரும்பிப் படித்தவை:

திரு என்.சொக்கன் அவர்கள் எழுதிய 'வெற்றிக்கு ஏழு படிகள்'. இது 'ரால்ஃப் ஸ்மித்' (Rolf Smith) எழுதிய "The 7-Levels of Change" என்ற ஆங்கில நூலைப் பற்றி. இந்தப் புத்தகத்தின் பிழிவை அவர் தந்திருக்கிறார். உலகமயமாக்கலுக்குப்பின் போட்டி என்பது சர்வதேச அளவிலாகி விட்டது; இந்தப் போட்டியில் வென்று சாதனை படைக்க வழிமுறைகளை கூறுகிறது இந்நூல். சுய முன்னேற்ற நூல்களை விரும்புவோர் இதனை அவசியம் படிக்க வேண்டும்.

அடுத்து...

தேடிப் பிடித்த தமிழர்: வரலாற்று ஆய்வாளர் திரு..இரா.வேங்கடாசலபதி அவர்கள் எழுதிய "ஆஷ் துரையின் குடும்பம்". நான் இதை மிகவும் ரசித்துப் படித்தேன். கப்பலோட்டிய தமிழன் படம் பார்த்த யாரும் அவ்வளவு எளிதில் ஆஷ் துரையையும், வாஞ்சிநாதனையும், மணியாச்சி சந்திப்பையும் மறந்திருக்க முடியாது. அந்த ஆஷ் துரையின் குடும்பத்தைத் தேடி சிரமப்பட்டு ஆராய்ந்து எஞ்சி உயிரோடுள்ள அவரது குடும்பத்தினரை அயர்லாந்திலுள்ள டப்ளினில் கண்டு எழுதியுள்ளார். போற்றப்பட வேண்டிய முயற்சி. ஆஷ் துரையின் பேரன் வாஞ்சியின் மீது காழ்ப்புணர்ச்சியில்லாமல் இருந்ததை நினைத்து நெகிழ்கிறார். 'கசப்புகளை எல்லாம் காலம் எப்படிக் கரைத்து விடுகிறது" என்ற அவரது வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது.

அடுத்து...

ஞாநியின் பக்கங்கள்: 'யாருக்கும் வெட்கமில்லை'.

ஞாநி ஒரு மகாத் துணிச்சல்காரர். தெளிவான சிந்தனையாளர். காரைக்குடி புத்தகத் திருவிழாவிற்கு அவரை அழைத்துப் பேச வைத்தது, வாசகர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யவைத்தது நினைவிற்கு வருகிறது.

சமீபத்தில் பரபரப்பாக அடிபட்ட நடிகை புவனேஸ்வரி வழக்கும், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகளையும் 'கிழி, கிழி' என்று கிழித்திருக்கிறார். சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள், பத்திரிக்கைக்காரர்கள் என்று யாரையுமே விட்டுவைக்கவில்லை. ஆனால் அவர் கூறும் உண்மைகளை யாராலும் மறுக்க முடியாது. இது போன்ற நெத்தியடி கட்டுரையை எந்த வித தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல், கொள்கை அடிப்படையில், அவர் மட்டுமே எழுத முடியும். கட்டுரைப்பொருள் உறுத்தலாக இருந்தாலும் என்னால் ஞானி அவர்களின் தெளிவான சிந்தனையை, தெளிவான எழுத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

அடுத்து...

இன்று படித்தவை-8: அக்டோபர் 24, 2009

8. 'Who Will Cry When You Die?: Life Lessons from The Monk who sold his Ferrari' by Robin S.Sharma (A Jaico Book)

என்னுடைய ஹீரோக்களில் ஒருவர் ராபின் ஷர்மா. இவரது நூல்களான 'The Monk who sold his Ferrari", "The Greatness Guide-I", "The Greatness Guide-II", "Mega Living", "The Saint, The Surfer and The CEO", "Discover Your Destiny" படித்து மகிழ்ந்திருக்கிறேன்; அவை இன்றும் என் புத்தக அலமாரியை அலங்கரிக்கின்றன. நினைத்தபோதெல்லாம் அவற்றை புரட்டிப் பார்க்கிறேன்.

இவரது சுய முன்னேற்ற நூல்களும், இவரது கருத்தரங்கங்களும் உலகப் புகழ் பெற்றவை. லட்சக் கணக்கில் விற்பவை இவரது நூல்கள்.

இந்த நூலில் 101 தலைப்புகளில் அருமையான சிந்தனைகளை வாரி வழங்கியிருக்கிறார். வாழ்க்கையில் முன்னேற வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற வேட்கை உள்ளவர்கள் இவரது நூல்களை வாங்கிப் படித்துப் பயன் பெறவேண்டும்.

இன்று நான் வாசித்தது 'செயல்' எவ்வளவு முக்கியம் என்பது. நம்மில் பலர் அற்புதமாகச் சிந்திக்கிறோம், நிறைய மேன்மையான விஷயங்களைப் படிக்கிறோம். ஆனால் அவற்றை அன்றாட வாழ்வில் கடைப் பிடிக்கிறோமா, அவற்றை செயல் படுத்துகிறோமா என்றால் இல்லை. அறிவு என்பது உள்ளுறை ஆற்றல். அதை செயல்படுத்தும்போது மட்டுமே அது முழுமை பெறுகிறது.

கனவு காணல், மனக்கோட்டை கட்டுதல் எல்லாம் ஒ.கே. ஆனால் அந்தக் கனவுகளை நனவாக்க வேண்டாமா? மனக்கோட்டைகளை நிஜக்கோட்டைகளாக்க வேண்டாமா? அப்படியானால் செயல்படுங்கள்; திட்டமிட்டு செயல்படுங்கள், செய்துகாட்டுங்கள். பெரிய பெரிய கற்பனைகளைவிட, ஒரு சிறிய செயல் எவ்வளவோ மேன்மையானது.

அடுத்து...?

இன்று படித்தவை-7: அக்டோபர் 24, 2009

7. "The New Art of Living" by Dr Norman Vincent Peale

என்னுடைய புத்தக அலமாரியிலுள்ள பெரும்பான்மையான புத்தகங்கள் பழைய புத்தகக் கடைகளிலோ, அல்லது தெருவோரக் கடைகளிலோ குறைந்த, மிகக் குறைந்த விலையில் வாங்கியவை. அப்படி வாங்கிய ஒரு நூல் இது.

டாக்டர் நார்மன் வின்சென்ட் பீல் ஒப்பற்ற பல தன்னம்பிக்கை நூல்கள், வாழ்கலை நூல்களை, சுய முன்னேற்ற நூல்களை எழுதியவர்.

நம்முடைய மேன்மைகளை பல சமயங்களில் நாமே உணர்வதில்லை. நம்மை நாமே தேவையில்லாமல் தாழ்த்திக் கொள்கிறோம். நம்முடைய மேன்மைகளை புரிந்துகொள்ள, பலகீனங்களிலிருந்து விடுபட, மன அமைதி பெற, அச்சங்களிலிருந்து விடுபட, வாழ்வில் உண்மையான ஆனந்தத்தை அடைய, வாழ வழிகாட்டும் ஒரு அற்புத நூல்.

வரும் நாட்களில் இதிலிருந்து எனக்கு மிகவும் பிடித்த மிகச் சிறந்த பகுதிகளை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அடுத்து...?

இன்று படித்தவை-6: அக்டோபர் 24, 2009

6. "The Story of My Experiments with Truth": An Autobiography of Mahatma Gandhi (Published by Navajivan Publishing House, Ahmedabad).

காந்தி மகான் நான் வழிபடும் தெய்வங்களுள் ஒருவர். இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கும் அவரது எழுத்துக்களின் தொகுப்பை (99 தொகுதிகள்) முழுமையாகப் படித்து, அம்மகானை இன்னும் சரியாகப் புரிந்துகொண்டு, அந்த இன்பத்தை இங்கே உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது என் கனவு.

சத்திய சோதனையாக தமிழில் வெளிவந்துள்ள இந்த நூலை அதன் ஆங்கில வடிவில் ஏற்கனவே ஒருமுறை படித்திருக்கிறேன் என்றாலும், மீண்டும் தினமும் சில பக்கங்கள் வீதம் ஆழமாகப் படித்துவருகிறேன்.

இன்று வாசித்தது இந்நூலிற்கு அவர் எழுதிய நான்கு பக்க அறிமுகம். இதில் புரிந்து கொண்டது, என் மனதில் படிந்தது:

தன்னையறிதல் என் லட்சியம். அதாவது இறைவனைக் காணல்; முழுமை பெறல். கடந்த முப்பது ஆண்டுகளாக இதையே நினைத்து, ஏங்கிப் போராடி வருகிறேன். நான் இயங்குவது, வாழ்வது இதற்காகவே. நான் பேசுவது, எழுதுவது அனைத்துமே இந்த இலட்சியத்திற்காகத்தான் .

என்னுடைய சோதனைகள் வெளிப்படையானவை. என்னால் செய்யமுடிந்தது எதையும் அனைவரும் செய்யமுடியும் என்று நான் நம்புகிறேன். ...

மதத்தின் உயிர்நாடி தூய்மையே.

சத்தியமே மேன்மையான தத்துவம். அதில் பல உயரிய தத்துவங்கள் உள்ளடக்கம். வாய்மை, தூய்மை, மெய்ம்மை - இவை மூன்றும் இணைந்ததே சத்தியம், உண்மை.

இறைவனை பலர் பலவிதமாகக் காண்கின்றனர். நான் சத்தியத்தை - உண்மையை இறைவனாக வழிபடுகிறேன். என்னைப் பொறுத்தவரை 'சத்தியமே கடவுள்'. சத்தியத்தின் மறுவடிவம் அஹிம்சை. அஹிம்சை சத்தியமும் வேறுவேறு அல்ல.

அடுத்து...?

இன்று படித்தவை-5: அக்டோபர் 24, 2009

5. The Message of the Upanisads: An Exposition of the Upanisads in the light of Modern Thought and Modern Needs by Swami Ranganathananda - Published by Bharatiya Vidya Bhavan, Mumbai.

இந்த நூல் கொல்கத்தாவிலுள்ள 'ராமகிருஷ்ணா மிஷன் இன்ஸ்டிடுட் ஆஃப் கல்ச்சரில்' (Ramakrishna Mission Institute of Culture) சுவாமி ரங்கநாதானந்தர் அவர்கள் வழங்கிய அற்புதமான சொற்பொழிவுகளின் தொகுப்பு. இந்நூலில் ஈசோபநிடதம், கேனோபநிடதம், கதோபநிடதம் ஆகிய முக்கிய மூன்று உபநிடதங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

ஏற்கனவே முழுமையாக வாசித்து இன்புற்ற மற்றொரு நூல் இது. தற்போது தினமும் சில பக்கங்கள் என்று வாசித்து வருகிறேன். இன்று வாசித்தது முதல் மூன்று பக்கங்கள். அதில் நான் புரிந்துகொண்டது, என் மனதில் பதிந்தது:

ஈசோபநிடதம், கேனோபநிடதம், கதோபநிடதம், ப்ரஸ்னோ உபநிடதம், முண்டக உபநிடதம், மாண்டூக்ய உபநிடதம், தைத்திரிய உபநிடதம், ஐத்ரேய உபநிடதம், சாந்தோக்ய உபநிடதம் மற்றும் ப்ருஹதாரண்யக உபநிடதம் ஆகியவற்றை முக்கிய உபநிடதங்களாகக் கருதி ஆதிசங்கரர் அவற்றிற்கு உரை வழங்கியுள்ளார்.

ஈசோபநிடதம் ஆன்மீக ஒருமைப்பாடு மற்றும் அனைத்து உயிர்களின் ஒருமைப்பாடு பற்றி விளக்குவது.

கேனோபநிடதம் வாழ்வின் இறுதியான முடிவான உண்மை, அழிவற்ற ஆன்மா பற்றி விளக்குகிறது.

கதோபநிடதம் ஒப்பற்ற கவிதை, மேன்மையான தத்துவம், மற்றும் ஆழ்ந்த ஆன்மீக உணர்வுகள் ஆகியவற்றின் இணையற்ற தொகுப்பு. உபநிடதங்களில் இதற்கென ஒரு தனி இடம் உண்டு. வேதாந்தத்தின் மறை பொருளை இதைபோல் விளக்க வேறு உபநிடதம் இல்லை.

நான்கு மகா வாக்கியங்கள்:

'அயம் ஆத்மா பிரம்மா' - நம் ஆன்மாவே பிரம்மம். (This Atman (Self of man) is Brahman. (மாண்டூக்ய உபநிடதம்)

'பிரக்ஞானம் பிரம்மா' - பரிபூரண உணர்வே பிரம்மம். (Brahman is Pure Consciousness) (ஐத்ரேய உபநிடதம்)

'தத் துவம் அசி' - நீ அதுவாகவே இருக்கிறாய். (Thou art That) (சாந்தோக்ய உபநிடதம்)

'அஹம் பிரம்மாஸ்மி' - நானே பிரம்மம் (I am Brahman) (ப்ருஹதாரண்யக உபநிடதம்)

அடுத்து...?

இன்று படித்தவை-4: அக்டோபர் 24, 2009

4. "Universal Message of the Bhagavad Gita: An Exposition of the Gita in the Light of Modern Thought and Modern Needs" by Swami Ranganathananda - Volume I (Published by Advaita Ashrama, Kolkatta)

மூன்று தொகுதிகள் கொண்ட இந்த அற்புதமான புத்தகத்தை ஒருமுறை படித்து இன்புற்றுவிட்டேன். சுவாமி ரங்கநாதானந்தர் பெரிய மகான். உலகளாவிய ராமகிருஷ்ண மடங்கள் மற்றும் மிஷன் ஆகியவற்றின் தலைவராக வாழ்ந்து, நூறு வயதைத் தொட சில காலம் மட்டும இருக்கும்போது மகா சமாதி அடைந்தவர். அவருடைய நூல்கள் தெளிவான சிந்தனைகள், மேன்மையான கருத்துகள், புரட்சிகரமான கண்ணோட்டம் கொண்டவை. இருமுறை அவரை நேரில் கண்டு, அவரது உரையைக் கேட்கும் பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது.)

தற்போது தினமும் ஒரு சில பக்கங்கள் என்று படித்து வருகிறேன். இன்று படித்தது முதல் பத்து பக்கங்கள். இதில் மனதில் பதிந்தது:

நடைமுறை வேதாந்ததிற்கு பகவத் கீதையைவிட சிறந்த நூல் இருக்க முடியாது. முழுமை அடைந்த மனிதர்களைக் கொண்ட ஒரு உன்னத சமுதாயத்தை உருவாக்க வழிகாட்டும் நூல். ஆனால் நாம் கீதையின் உன்னதக் கருத்துக்களை அன்றாட வாழ்வில் பின்பற்றுவதை விட்டுவிட்டு , அதை ஒரு பூஜைக்குரிய ஒரு பொருளாக மட்டுமே காண்கிறோம். நாம் கீதையின் மேன்மையான கருத்துக்களை புரிந்துகொண்டு, அவற்றை அன்றாட வாழ்வில் கடைப்பிடித்திருந்தால் வெளிநாட்டினரிடம் அடிமைப் பட்டிருக்கமாட்டோம். ஜாதிப் பூசல்கள், அடக்குமுறைக் கொடுமைகள், கொடிய வறுமை இவற்றில் உழன்றிருக்க மாட்டோம்.

மனித மகத்துவம், சுதந்திரம், சமத்துவம் - இவற்றின் அடிப்படையில் ஒரு புதிய மேன்மையான சமுதாயத்தை அமைப்பதற்கான வழியை கீதை காட்டுகிறது.

"வேதங்கள் என்ற பசுக்கள் தரும் பால், கீதை. ஸ்ரீ கிருஷ்ணர் அந்தப் பாலைக் கறந்து நமக்கு வழங்கும் பால்காரர். நாம் அதைப் பருகி பலம் பெறவேண்டும், வளரவேண்டும், மேன்மையடைய வேண்டும். ஆனால் பல நூற்றாண்டுகளாக நாம் அதைப் பூக்களால் பூசித்தும், வழிபட்டும், வணங்கியும் வந்தோமே தவிர அதைப் பருகவில்லை. அதனால்தான் நம் உடலும் உள்ளமும் பலமிழந்து, நம் சமுதாயமும் நலிந்துவிட்டது. இப்போது நாம் அப்பாலைப் பருகி, அதன் மேன்மையை கிரகித்து, மேன்மையான பண்புகள், செயல் திறமை, தொண்டுள்ளம் பெற்று ஒரு புதிய ஒப்பற்ற சமுதாயத்தைச் உருவாக்க வேண்டும். நம் நாட்டின் தலைவிதியை மற்ற வேண்டும்."

அடுத்து...?

இன்று படித்தவை-3: அக்டோபர் 24, 2009

3. அன்னை ஸ்ரீசாரதாதேவி - விரிவான வாழ்க்கை வரலாறு - எழுதியவர் சுவாமி ஆசுதோஷானந்தர் - பல வருடங்களுக்கு முன் ஒருமுறை மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்திருக்கு சென்றிருந்தபோது வாங்கியது. அப்போதைய விலை ரூபாய் ஐம்பது)

இன்று படித்தது, முதல் இரண்டு பக்கங்கள். அதிலிருந்து என் மனதில் தைத்தது, மனதில் பதிந்தது:

"வானத்தை நானே ஈன்றேன். வானுக்கு மேலும், கீழும் என் ஆதிக்கமே உள்ளது. என் உடல் பிரபஞ்சத்தையே வியாபித்து நிற்கிறது. காற்றை உலகைப் படைத்தவள் நானே. எனது மகிமையால் நான் மண்ணையும், விண்ணையும் கடந்து நிற்கிறேன்". பிரம்ம நிலையை அடைந்த பெண்மணி ஒருவர் இப்படிக் கூறுவதாக வேதத்தில் வருகிறது. இப்படி ஒரு மேன்மையான நிலையை அடைய வேண்டும் என்ற துடிப்பு வேதகால மகளிரிடம் இருந்தது. இதுவே அவர்களது லட்சியமாகவும் இருந்தது.

ஆனால் வேத கால இறுதியில் நம் நாடு இந்த உயரிய நிலையில் இருந்து வழுவியது. பெண்கள் வேதம் கற்பது தடை செய்யப்பட்டது. அவர்கள் ஆணுக்கு அடங்கி நடக்குமாறு செய்யப்பட்டார்கள். அந்நியர் படையெடுப்புகளால் விளைந்த சமுதாய மாற்றங்கள் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். இருப்பினும் சமுதாயம் பெண்களுக்கு இழைத்த அநீதிகளில் இதுவும் ஒன்று. இதன் பலனை நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இருப்பினும் மற்ற கல்வி, பெருமை பெண்களுக்கு மறுக்கப்படவில்லை. வேத காலத்தில் இருந்த பிரம்மவாதினி லட்சியம் மறைந்து, பதிவிரதை லட்சியம் அதன் இடத்தைப் பிடித்துகொண்டது.

பெண்ணைச் சிறுவயதில் தந்தையும், இளவயதில் கணவனும், முதுமையில் மகனும் காக்கவேண்டும் என்கிறது மனு நீதி. ஆணுக்குப் பெண் அடங்கி நடக்க வேண்டும் என்று கூறிய அதே மனு நீதி, 'பெண் எங்கே மதிக்கப்ப்டுகிறாளோ
அங்கே தேவதைகள் மகிழ்கிறார்கள்' என்கிறது. தேவி மகாத்மியம் இன்னும் பல படிகள் மேலே சென்று 'எல்லாப் பெண்களும் தேவியின் அம்சம். இவ்வுலகில் காணும் பெண்கள் எல்லாம் உன் வடிவம்' என்கிறது.

அடுத்து...?

இன்று படித்தவை-2: அக்டோபர் 24, 2009

2. "Complete Works of Swami Vivekananda", Volume VII (கொல்கத்தா அத்வைத ஆஸ்ரமத்தின் மலிவுப்பதிப்பு)

மொத்தம் ஒன்பது புத்தகங்கள். தற்போது இரண்டாம் முறையாக வாசிக்கிறேன். முதற் தடவை போலல்லாது ஒவ்வொரு பக்கத்தையும் ஆழமாக வாசித்து, அசை போட்டுச் செல்கிறேன். எனவே தினமும் ஓரிரு பக்கங்கள் மட்டுமே படிக்கிறேன். இன்று படித்தது பக்கங்கள் 44-45.

அதிலிருந்து நான் புரிந்துகொண்டது:

பக்தி மார்க்கம் அல்லது அன்பு வழி என்பது இயல்பானது, இனிமையானது. தத்துவ மார்க்கம் அல்லது ஞான மார்க்கம் சிரமமானது; எதையும் ஏன், ஏதற்கு என்று கேள்விகள் கேட்டு புரிந்துகொண்டு முன்னேறவேண்டும். அன்புவழி தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வது; எளிமையானது, இன்பமானது; ஆனால் நீண்ட பாதை, நீண்ட பயணம்.

மேன்மையான ஒரு லட்சியத்தை தேர்ந்து, அதற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொள். மரணம் என்பது நிச்சயம்; அப்படியிருக்க ஒரு மேன்மையான லட்சியத்திற்காக வாழ்ந்து, தேவைப்பட்டால் அதற்காகவே மடி.

அடுத்து...?

இன்று படித்தவை-1: அக்டோபர் 24, 2009

1. "The Gospel of Sri Ramakrishna" by Mahendranath Gupta - (சுவாமி நிகிலானந்தா அவர்களின் அருமையான ஆங்கில மொழி பெயர்ப்பு - மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ணா மட வெளியீடு)

என்னுடைய தலையாய வேத புத்தகம். பல முறை படித்திருந்தாலும், மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும் என்பதால் 'தினமும் படிக்கவேண்டிய புத்தகங்கள்' வரிசையில், மேஜை மீது தனியே வைத்திருக்கிறேன். என்னுடைய அருமை நண்பர் முனைவர் ரா.ஜானகிராமன் அவர்கள் எனக்கு அன்புடன் வழங்கிய நாள்: ஜூலை ஏழு, 1990. கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்கள் வரை என் புத்தக அலமாரியில் உறங்கிக் கொண்டிருந்தது. தாங்கமுடியாத மன உளைச்சலால் தனிமைப்பட்டு துன்பப்பட்டுக் கொண்டிருந்த நேரம், என்னை அறியாமல், இதை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். ஒரு அற்புதமான ஔடதமாக வேலை செய்தது. அப்புறம் என் வாழ்க்கையின் திசையே மாறிவிட்டது.

325-326 பக்கங்களை இன்று படித்தேன். இல்லறத்தாருக்கான பயனுள்ள அறிவுரைகள் அடங்கிய பகுதி இது.

இல்லறத்தார் ஆன்மீகத்தில் ஈடுபட எத்தனை இடைஞ்சல்கள், சிரமங்கள்! நோய்நொடிகள், துன்பம் துயரம், வறுமை, மனைவியுடன் கருத்து வேறுபாடு, சொன்னபடி கேட்காத பிடிவாத குணமுள்ள குழந்தைகள் என்று பெரிய பட்டியலே போடலாம். இருப்பினும் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும். அவ்வப்போது எங்காவது சென்று, தனிமையில் பிரார்த்திக்க வேண்டும். இறைவனை அடைய முயற்சிக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு நாளோ, இரண்டு நாளோ எல்லாவற்றையும் மறந்து, எங்காவது சென்று தனிமையில் ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபடவேண்டும். அல்லது ஆன்மீகச் சான்றோரோடு தங்கி அவர்களுடன் வசிக்கவேண்டும்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மடங்களில் 'அந்தர் யோகம்' பயிற்சி நடத்துவது குருதேவரது இந்த அறிவுரையின்படி என்று நினைக்கிறேன். நானும் தொடர்ந்து மூன்றாண்டுகள் , குருதேவர் ஜெயந்தியை அடுத்து திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தில் நடைபெறும் மூன்று நாள் அந்தர் யோகப் பயிற்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ந்திருக்கிறேன், பயனடைந்திருக்கிறேன். குருதேவரது அறிவுரையின் மேலான உண்மையை அனுபவித்து உணர்ந்திருக்கிறேன்.

வருடம் முழுவதும் திருப்பராய்த்துறையில் அந்தர் யோகம் நடைபெறுகிறது. தேதி மற்ற தகவல்களை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை, திருச்சி மாவட்டம் என்ற முகவரிக்கு எழுதிப் பெறலாம். அல்லது அவர்களது மாத இதழான 'தர்ம சக்கரத்தில்' காணலாம்.

அடுத்து நான் படித்தது....?