30 ஆக., 2010

சூரியின் டைரி-28: அருள்மிகு கோகுலவினாயகர் கோவில் கும்பாபிஷேகம்

உ 
ஓம் சக்தி

நேற்று, ஆகஸ்ட் 29ம் நாள், ஞாயிற்றுக் கிழமை காலை கோட்டையூர் அருள்மிகு கோகுலவினாயகர்-அருள்மிகு நாகவல்லி அம்மன் கோவில் புனருத்தாரண அஷ்டபந்தன கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது.  கோட்டையூர் பேருந்து நிறுத்தம் நகர சிவன் கோவில் அருகில் உள்ளது.  அங்கிருந்து ஸ்ரீராம் நகர் செல்லும் சாலையில் வலது புறம் அமைந்துள்ளது தெற்கு ஊரணி.  அதன் மேல் கரையில் அருள்மிகு சாஸ்தா ஆலயத்திற்கும், அருள்மிகு இராஜகணபதி  ஆலயத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.   

இறையருளால் இந்த கும்பாபிஷேகத்தைக்  காணும் இனிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவ்வமயம் எடுத்த புகைப்படங்களை கீழே பதிவு செய்துள்ளேன்.

எனது மாமா  திருவாவடுதுறை ஆதீனத்தில் நீண்ட காலம் பணி புரிந்தவர். ஆலயப் பராமரிப்புப் பொறுப்பில் இருந்தவர்.  நிறைய கோவில்கள், குடமுழுக்குகள் பார்த்தவர்.  செட்டிநாட்டுப் பகுதியில் ஆலயப் பராமரிப்பு, குடமுழுக்கு ஏற்பாடுகள், யாகசாலை அமைப்பு போன்றவற்றின் சிறப்பை மிகவும் போற்றி, புகழ்ந்துரைப்பார் அவர்.   இந்த ஆலயம், யாகசாலை ஆகியவற்றைப் பார்த்தபோது எனக்கு அவரது நினைவு வந்தது.








அருள்மிகு கோகுலவினாயகர்-நாகவல்லி அம்மன் ஆலயம்

யாகசாலை


யாகசாலையின் எழில்மிகு தோற்றம்  மற்றொரு கோணத்தில்

குடமுழுக்கு விழாவைக் காண வந்திருந்த அடியார் கூட்டம்

அருள்மிகு இராஜகணபதி ஆழத்தின் முன்புறம் மெய்யடியார் கூட்டம்

விநாயகப் பெருமானின் வடிவான யானையை வேடிக்கை பார்க்கும் சிறுவர் கூட்டம்

அருள்மிகு கோகுலவினாயகர் ஆலயக் கோபுரம் குடமுழுக்கிற்குத் தயார் 







யானை முன் செல்ல, மங்கள வாத்தியங்கள் முழங்க  சிவாச்சாரியார்கள் அழைத்துவரப்படுகின்றனர்.

சிவாச்சாரியார்கள்  குடமுழுக்கிற்காக கோபுரத்தில் ஏறுகின்றனர்

ஆலயத்தைச் சுற்றிலும் குடமுழுக்கைக் காண வந்த மெய்யடியார் கூட்டம்

ஸ்ரீ கோகுல விநாயகர் கோவிலிலிருந்து தெற்கு ஊரணி - ஒரு காட்சி


ஓம் ஏக தந்தாய வித்மஹே 
வக்ர துண்டாய தீமஹே 
தன்னோ தந்திப்  பிரசோதயாத்!
 ஓம் ஸ்ரீ மஹா கணபதயே  நமஹ!!  

சர்வ மங்கள மாங்கல்யே சிவே 
சர்வார்த்த சாதகே த்ரயம்பகே 
கௌரி நாராயணி  நமோஸ்துதே!

25 ஆக., 2010

சூரியின் டைரி-27: முனைவர் சுந்தரமும், பேராசிரியர் 'வெற்றி' மெய்யப்பன் அவர்களும்

மேலே  உள்ள  படம்  இரண்டாவது  காரைக்குடி  புத்தகத்  திருவிழாவின்  துவக்க  விழாவில்  எடுக்கப்பட்டது  என்று  நினைக்கிறேன்.  மனிதமேம்பாட்டு அறிவியல் அமைப்பு  (FASOHD - Forum for Advancement of Science of Human Development) காரைக்குடி மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆதரவுடன்  காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில்  நடத்திய இத்திருவிழா அமைப்புக் குழுவின் தலைவர்  பேராசிரியர் முனைவர்  ச.மெய்யப்பன் அவர்கள் (தமிழ்நாட்டின் தலைசிறந்த பதிப்பகங்களின் ஒன்றான மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளர், 'வெற்றி' மெய்யப்பன் என்று போற்றப்படுபவர்) மேடையில் பேசுவதைப் படத்தில் காணலாம்.  அருகில் அமர்ந்திருப்பவர் எங்கள் அமைப்பின் தலைவர் முனைவர் வே.சுந்தரம் அவர்கள் (காரைக்குடி மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Central Electrochemical Research Institute) திட்டமிடல் பிரிவின் தலைவர் மற்றும் இணை இயக்குனர்).

சென்னையிலும், நெய்வேலியிலும் நடைபெறும் மாநில அளவிலான  புத்தகக் கண்காட்சியைபோல் ஒன்று காரைக்குடியிலும்  நடத்தவேண்டும் என்பது என் நெடுநாளைய கனவு.  அதை நிறைவேற்ற பல பெரியவர்கள், நண்பர்கள் பலவகையில் உதவியுள்ளனர்.  அதில்  குறிப்பிடத்தக்கவர்கள் மேலே உள்ள இருவரும், மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் மீ.இராகவன் அவர்களும், எங்கள் அமைப்பின் செயலர் முனைவர் (திருமதி) ந.கலைச்செல்வி அவர்களும் (தமிழிலிலும், ஆங்கிலத்திலும் மிகச் சிறப்பாக உரையாற்றும் வல்லமை படைத்தவர், எங்கள் நிறுவனத்தின் செயல்திறன்மிக்க விஞ்ஞானி)  மற்றும் காரைக்குடி நலந்தா பதிப்பகத்தின் உரிமையாளர் நண்பர் திரு.ஜம்பு அவர்களும்.

முதலாமாண்டிலேயே புத்தகத் திருவிழா சிறப்பாக அமைந்து எண்ணற்ற பலருக்கும் பயனுள்ளதாக அமைந்துவிட்டது.  அதைத் தொடர்ந்து இன்றுவரை ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமாக இந்த விழா நடந்து வருகிறது.  (இடையில் ஓராண்டு மட்டும் நடக்கவில்லை என்று நினைக்கிறேன்). 

வீட்டில் இடப் பிரச்சினை காரணமாக தொகுத்து வைத்திருந்த  பேப்பர்களையும்,  புத்தகங்களையும் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு கழிக்க ஆரம்பித்தேன்.  அப்போது சிக்கிய படங்களில் ஒன்றுதான் மேலே உள்ள படம்.  இந்தப் படத்தைக் கண்டதும் என் நினைவுகள் பின் நோக்கிச் சென்றன.  பல துறையைச் சேர்ந்தவர்களும், மாணவ மாணவியரும், போது மக்களும் எவ்வளவு ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும்  கலந்து கொண்டனர்!  புத்தகத் திருவிழாவையொட்டி  எத்தனை எத்தனை கலை இலக்கிய நிகழ்ச்சிகள், போட்டிகள், பரிசுகள்!!   ஒருவருட நிறைவு விழாவிற்கு வருகை புரிந்த,  சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்கள் என்னிடம் கூறினார்: "சூரி! நீங்கள் அமைத்துள்ள இந்தப் புத்தகத் திருவிழா எத்தனை பேர் வாழ்வில் எப்படியெல்லாம் மாற்றம் விளைவிக்கும்  என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்.  ஆனால் என்னால்  அதை மனக் கண்ணில் காண முடிகிறது" என்று புகழ்ந்துரைத்தார். அந்த இனிய நாட்களை எண்ணி மகிழ்ந்தேன்.

முனைவர் இராகவன் அவர்களும், முனைவர் சுந்தரம் அவர்களும் நானும் பணி நிறைவு பெற்று மைய மின்வேதியியல் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டோம்.  அதைத் தொடர்ந்து,  மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் பெற்றெடுத்த செல்லக் குழந்தையான  மனித மேம்பட்டு அறிவியல் அமைப்போடு எங்களுக்குள்ள தொடர்பும் குறைந்து விட்டது.  கருத்து வேற்றுமை காரணமாக நண்பர் ஜம்பு அவர்கள் தொடர்பு இல்லாமல் போய்விட்டது (அதில்  இழப்பு எனக்குத்தான்).  பேராசிரியர் வெற்றி மெய்யப்பன் அவர்கள் இறையடி சேர்ந்துவிட்டார்கள்.  திருமதி கலைச்செல்வி அவர்கள் இன்னும் பணியிலிருக்கிறார்கள்.  ஆனால் அவர்களுமே அமைப்பில் எந்தப் பொறுப்பிலும் இல்லை.  

முனைவர் சுந்தரம் அவர்களுக்கும் எனக்கும் உள்ள நட்பு இன்றும் தொடர்கிறது.  பலவகைகளில் எங்களது சிந்தனை, ஈடுபாடு ஒரே மாதிரி இருக்கும்.  அவர் தலைவராக இருந்தபோது அவரும், செயலர் திருமதி கலைச்செல்வி அவர்களும் எனக்கு அளவிலாத சுதந்திரம் அளித்திருந்தார்கள்;  பிரச்சினை என்று வந்தபோதெல்லாம்  என்னை   விட்டுக் கொடுக்காமல் காத்தனர்.  அதனால் என்னால் மிகச் சிறப்பாகவும், மனதிற்கு நிறைவாகவும் செயல்பட முடிந்தது.  அவர்களுக்கும், எனக்கு உறுதுணையாக இருந்த மற்ற அன்பர்கள் அனைவருக்கும் எங்கே எனது உளமார்ந்த நன்றிகளைப் பதிவு செய்கிறேன். 

மனித மேம்பாட்டு அறிவியல் அமைப்பும், காரைக்குடி புத்தகத் திருவிழாவும் எனக்குப் பெற்றுத் தந்த இனிய அனுபவங்கள், நல்ல நண்பர்கள் எத்தனை!  அதையெல்லாம் தற்போது நினைத்துப் பார்க்கையில் மனம் மகிழ்ச்சி அடைகிறது.  இது போல மேலும் பல படங்கள் கிடைத்துள்ளன.  ஒவ்வொன்றும்  பழைய நினைவுகளைக் கிளறுகின்றன.  வரும் நாட்களில் அவற்றைப் பற்றியெல்லாம் எழுதுவேன். 

23 ஆக., 2010

சூரியின் டைரி-26: தடுப்பூசி போட்டபின் குழந்தைகள் மரணம்

இன்று காலை இந்து  ஆங்கில நாளிதழின் முதல் பக்கத்தில் லக்னோவில் நான்கு குழந்தைகள் தட்டம்மை தடுப்பூசி போட்டபின் இறந்தது பற்றி விசாரணை நடத்த மத்திய சுகாதார அமைச்சகத்திலிருந்து ஒரு குழு லக்னோ சென்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.  ஏற்கனவே டி.வி.யில்  இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் கதறி அழும் நெஞ்சைப் பிழியும்  காட்சியைப்  பார்த்திருந்தேன்.

என் நெஞ்சில் சில கேள்விகள் எழுகின்றன. இந்தக் கொடுமைக்குக் காரணம்  அலட்சியமா, கலப்படமா?  இதன் பின்னணியில்  யார்யார் இருக்கிறார்கள்?  யார் இதற்கெல்லாம் பொறுப்பு?   விசாரணையில் உண்மை வெளிவருமா?  அப்படியே வந்தாலும் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்களா?  இது போன்று கொடுமைகள் இனியும் நடக்காதிருக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

அடுத்து,   மாற்றுமுறை மருத்துவங்களில் ஈடுபாடு கொண்டவன் என்றமுறையிலும், ஹோமியோபதி  மருத்துவத்தைப்  பயின்றவன், அதைப் பற்றி  ஆழமாகச் சிந்தித்தவன் என்றமுறையிலும் என் கருத்துக்கள் சிலவற்றை இங்கே பதிகின்றேன்.

ஹோமியோபதியிலும் தடுப்பு மருந்துகள் உள்ளன.  ஆனால் அவை  யாரையும் கொன்றதாக நான் கேள்விப்பட்டதில்லை.  அதற்கு வாய்ப்பும் இல்லை.  ஏனெனில்  ஹோமியோபதி மருந்துகள் அனைத்தும் நுன்மமாக்கப் பட்டவை;  மருந்தின் அளவு மிக மிகக் குறைவு.  You can express the medicinal content only in exponential form like hundred to the power of minus two hundred.   மருந்திற்காக ஆகும்  செலவும்  நம்பமுடியாத அளவிற்குக் குறைவு. முறைப்படி ஹோமியோபதியைப் பயன்படுத்தும்போது பக்கவிளைவுகளோ,  பின்விளைவுகளோ ஏற்படுவதில்லை.  தீராத நோய்கள் குணமாகின்றன.  ஹோமியோபதி ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் இந்த உண்மைகள் தெரியவரும்.   இருப்பினும் யாரும் ஹோமியோபதி மருத்துவத்தை முறைப்படி  அறிந்து கொள்ளவோ, பயன்படுத்தவோ முன்வருவதில்லை.  அதைக் குறைகூறுவோரும், கேலி செய்வோரும் அதிகம்.

ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை டாக்டர் ஹானிமன் ஆறு ஆண்டுகள் கடுமையான சோதனைக்குப் பின்தான்  ஹோமியோபதியை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.  அம்மருத்துவத்தின்  அடிப்படையைக் கூறி  யார் வேண்டுமானாலும்  பரீட்சித்துப் பார்க்கலாம்  என்று வெளிப்படையாகவே வேண்டுதல் விடுத்தார்.  பல அல்லோபதி மருத்துவர்கள்  அவ்வாறு முயன்றபின்  ஹோமியோபதித்  துறைக்கு  மாறினர், மகத்தான  சாதனைகள் படைத்தனர் என்பதை  ஹோமியோபதி வரலாறு  கூறுகிறது. 

நான் எந்த மருத்துவத் துறைக்கும்  எதிரி அல்ல.   இந்த உண்மைகளை அனைவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டும் எண்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.  நன்றி, வணக்கம்!

இன்றைய சிந்தனைக்கு-119:

குழந்தைகள்  வைரங்கள்.  
அவர்களைத்  திட்டாதீர்கள்;  தீட்டுங்கள்.

22 .2 .2009 தினமணி கதிரில் திரு.அ.அழகப்பன், சிவகங்கை   (குழந்தைகள் மருத்துவமனையில் கண்ட வாசகம்)

நன்றி:  திரு அழகப்பன் மற்றும்  தினமணி கதிர்


22 ஆக., 2010

இன்றைய சிந்தனைக்கு-118:

தகாதவர்களுக்குக்  காட்டும்  சலுகைகள்  பெரும்பாலும்  கேடு  விளைவிக்கும்.   

நலக்குறிப்புகள்-62: பீன்ஸ்

பீன்சிலிலுள்ள  நார்ச்சத்து  கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தக்கூடியது.  பீன்ஸ்  இரத்தத்திலுள்ள  சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும், இதயம் சரிவர இயங்க உதவும்.  இதில் ஆன்டி-ஆக்சிடண்டுகள், ஃபாலிக் அமிலம், வைட்டமின் B6 மற்றும் மக்னீசியம்  உள்ளது.  

20 ஆக., 2010

சூரியின் டைரி-25: "இனிய உதயம்" மாத இதழ் - ஆகஸ்ட் 2010


நக்கீரன் குழுவிலிருந்து வெளிவரும் மாத இதழ் இனிய உதயம். திசை எட்டும் இதழ் போல,  இதுவும்  ஒரு மொழி பெயர்ப்பு இலக்கியத்திற்கான இதழ்.  இதன் ஆசிரியர் சுரா.  இதன் முக்கியமாக எழுதுபவரும் அவரே.  பெரும்பாலான கதைகள் மலையாளத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை.  ருசிய மொழிக் கதைகளும் அவ்வப்போது வருகின்றன.  இந்த இதழைத் தேடிப் பிடித்து வாங்கிப் படிப்பவன் நான்.  இதில் என்னைப் பெரிதும் கவர்ந்தது இதில் வெளியும் எழுத்தாளர் நேர்காணல்களே.  அவை அனைத்துமே மிகச் சிறப்பாக அமைந்துள்ளன.

இந்த மாத இதழை (ஆகஸ்ட் 2010 )  சென்னை சென்றிருக்கும்போது ஒரு கடையில் வாங்கினேன்.  (எல்லாக் கடைகளிலும் இது கிடைப்பதில்லை).  இதழ் முழுவதையும் சமீபத்தில் சென்னை-திருச்சி பயணத்தின்போது படித்து முடித்தேன்.  நிறைவாக இருந்தது.  குறிப்பாக திருப்பூர் கிருஷ்ணன் அவர்களது நேர்காணல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  எனக்கு திருப்பூர் கிருஷ்ணன் அவர்களைத் தெரியும்.  காரைக்குடி புத்தகத் திருவிழாக்களில் ஒவ்வொரு நாளும் ஒரு எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு நிகழ்ச்சியும், சிறப்புரையும் என் பொறுப்பில் இருந்த நான்காண்டுகளிலும் நடந்திருக்கின்றன.  அது போன்று ஒரு புத்தகத் திருவிழாவில், ஒரு நாள் மாலை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அவர் வந்திருந்தார்.  அப்போது எனக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாது.  சிறுவயது முதலே இதழ்கள், நூல்கள்  சேகரிப்பதும், கதைகள் வாசிப்பதும் என் மனதிற்குப் பிடித்த ஒன்று.  ஆனால் இடைய ஒரு பத்துப் பதினைந்து வருடங்கள் ஆங்கில மோகம் கொண்டு, ஆங்கில இதழ்கள், ஆங்கில நாவல்கள், சிறுகதைகள் என்று போய்விட்டபடியால்,  இடைக்காலத்தில் எழுதிய எழுத்தாளர்களைப் பற்றி எனக்குத் தெரியாமல் போய்விட்டது.  அது என்னுடைய இழப்புத்தான்.

புத்தகத் திருவிழாவிற்கு தினமும் ஒரு எழுத்தாளரைத் தேடும் பணியில் எனக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தவர் நண்பர் பசுமைக்குமார் அவர்கள்.  அவர்கள் மூலமாகத்தான் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களைத் தொடர்புகொண்டு காரைக்குடிக்கு வரவழைத்தோம்.  எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு நிகழ்ச்சி, சிறப்புரை தவிர அன்றிரவு  நண்பர் பசுமைக்குமார் அவர்களது சிறுகதைத் தொகுப்பை திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டார்.  (சோதனையாக, அன்றிரவின் இறுதி நிகழ்ச்சி என்பதாலோ என்னவோ, புத்தக வெளியீட்டின் போது கூட்டமே இல்லை. சரியாக விளம்பரம் செய்து, கூட்டம் சேர்க்கத் தவறிவிட்டேனோ என்று என் மேலேயே எனக்கு வருத்தம்.)  நூலை வெளியிட்டுப்  பேசும்போது கிருஷ்ணன் அவர்கள் பசுமைக்குமார் அவர்களது எழுத்தாற்றலைப் போற்றிப் பேசிவிட்டு, அவரது நூலுக்கு ஆதரவு நல்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  எங்கள் அமைப்பின் சார்பாக நான் 100 பிரதிகள்  வாங்கினேன்.  அவற்றை எங்கள் அமைப்பின் நிகழ்ச்சிகளில், குறிப்பாக அந்த ஏப்ரலில் நாங்கள் நடத்திய உலக புத்தக தினவிழாவில் அனைவருக்கும் பரிசாக அந்த நூலை வழங்கினோம்.  மன்னிக்கவும், எங்கிருந்து எங்கேயோ போய்விட்டேன்.  மறுபடியும் இனிய உதயம் நேர்காணலுக்கு வருகிறேன்.  

திருப்பூர் கிருஷ்ணன் அவர்களைப் பற்றி நிறையத் தெரிந்துகொள்ளும் இனிய வாய்ப்பை இனிய உதயம் நல்கியது.    நா.பார்த்தசாரதி, கோமல் சுவாமிநாதன், சுஜாதா, வல்லிக்கண்ணன், சி.சு.செல்லப்பா, லா.சா.ரா. தி.க.சி.  போன்ற மூத்த எழுத்தாளர்களது அன்பைப் பெற்ற பத்திரிக்கையாளர், எழுத்தாளர், கவிஞர், அம்பலம் இணைய இதழின் ஆசிரியர்; இப்படிப் பன்முக சாதனையாளர். அவர் நா.பாவின் தீவிர ரசிகர்.  நா.பா. அவருக்கு குரு.  நா.பாவுக்கோ அவர் சொந்தத் தம்பி போல.  தினமணி கதிரில் உதவி ஆசிரியராக இருபத்தைந்தாண்டுகளும், பின்னர் தீபம், அமுதசுரபி பத்திரிக்கையிலும்  பணியாற்றியிருக்கிறார்.  250 சிறுகதைகளும், 5000க்கும் மேற்பட்ட மரபுக்கவிதைகளையும் எழுதியுள்ளார்.  அவரது படைப்புகள் தாமரை, ஆனந்த விகடன், கல்கி, குமுதம் ஜங்ஷன்  போன்ற இதழ்களில் வெளியாகி உள்ளன. தன் குருவைப் பற்றி, 'வாழ்வும் பணியும்' என்ற தலைப்பில் ஒரு நூலைச் சாஹித்ய  அகாதெமிக்காக  எழுதியுள்ளார்.  கல்கியில் தனது பத்திரிகை, எழுத்துலக அனுபவங்களை 'சுவடுகள்' என்ற தலைப்பில் 42 வாரங்கள் எழுதியுள்ளார். 'அரவிந்த அமுதம்'  என்ற ஆன்மிகத் தொடரையும் அதில் எழுதியுள்ளார் 

எல்லோருடனும் இனிமையாக, வேற்றுமை பாராட்டாது பழகும் ஆன்மிகவாதியான  இவருக்கு  பொதுவுடைமை நண்பகலும் உண்டு.  மேலாண்மை பொன்னுச்சாமி, பொன்னீலன், சின்னப்பா பாரதி போன்றவர்கள் நெருங்கிய நண்பர்கள்.  

இலக்கியம் பற்றிய அவரது கருத்து எண்ணெய் மிகவும் கவர்ந்தது: "உலகில் மனிதன் பிறக்கிறான், ஒரு நாள் இறக்கிறான்.  இடையில் இருக்கும் வாழ்க்கையில் பல்வேறு வகையான கருத்துப் போக்குகள், உணர்ச்சிகள் அவனை அலைக்கழிக்கின்றன.  அதைப் பற்றிய ஆழ்ந்த விசாரணையாக அமைவதுதான்  ஆழ்ந்த இலக்கியம்."

அவரது திருப்பூர் குமரன் பதிப்பகத்தின் மூலம் கல்கியில் தான் எழுதிய சுவடுகள் தொடரை நூலாக வெளியிட்டுள்ளார்.  'இலக்கிய முன்னோடிகள்', 'இலக்கிய உலகில்',  மற்றும் அவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு மரபுக் கவிதைத் தொகுப்புகள் ஆகியவற்றையும் வெளியிடவிருக்கிறார்.  தனது நெடுநாளைய ஆசையான இலக்கிய இதழ் தொடங்கும் ஆசை விரைவில் நிறைவேறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.   
   
அவரது சாதனைகள் தொடர, அவரது ஆசை நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக!

இந்த நேர்காணல் தவிர, இந்த இதழில் வைக்கம் முஹம்மது பஷீர் அவர்களது இரு சிறுகதைகளும் (இரு சிறப்பான, வித்தியாசமான காதல்கதைகள்),  கேசவதேவ் அவர்களது இரு சிறுகதைகளும் (வாழ்க்கையின் வரேதனைகளையும், அத்தனைக்கும் ஊடே சுடர்விட்டுப் பிரகாசிக்கும் அற்புத மனிதர்களையும் பற்றிக் கூறும் இரு கதைகள்)  உள்ளன.

இனிய இதயம் இதழின் ஆசிரியர்களுக்கும், பதிப்பாளருக்கும் அவர்களது சீரிய முயற்சிக்கான எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.  என் தொகுப்பில்  உள்ள மற்ற இனிய இதயம் இதழ்கள் பற்றியும் எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கிறது, பார்க்கலாம். 

17 ஆக., 2010

நலக்குறிப்புகள்-61: சீரகத்தின் சிறப்புகள்

சீர் + அகம்.  உள்ளுறுப்புகளை சீராக்கும் ஆற்றல் படைத்துள்ளதால்  இடப்பட்ட  காரணப் பெயர்.  உடலில்  ஆற்றல் பெருகுவதற்கும், வளர்சிதை மாற்றம் சரியாக நடைபெறவும் உதவுகிறது.   நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்  உதவுகிறது.  குறிப்பாகப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும்  மிகவும் நல்லது.  மாதவிடாய்ப் பிரச்சினை உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள்,  பால் கொடுக்கும் தாய்மார்கள்  உணவில் இதை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

இன்றைய சிந்தனைக்கு-116:

நோயில்லாதவன்   வாலிபன்.  கடனில்லாதவன்  பணக்காரன் - பழமொழி   

16 ஆக., 2010

சூரியின் டைரி-24 : செல்லம்மாள் பாரதியின் "பாரதியார் சரித்திரம்"

சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள  இந்நூலை 2007ல் வாங்கினேன் என்று நினைக்கிறேன்.  வாங்கியவுடனே படித்தும் விட்டேன்.  தற்போது மீண்டும் படித்தேன்.  யோகி சுத்தானந்த பாரதியார் அவர்களது முன்னுரையுடன் தொடங்கும் இப்புத்தகம், 96 பக்கங்கள் கொண்டது.   விலை ரூபாய் 35 /-.  

பாரதி அன்பர்கள் அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய மற்றொரு நூல்.  இதன் சிறப்பு அவருடன் வாழ்ந்த அவரது துணைவியார் எழுதியது;  மற்றவர் யாருக்கும் தெரியாத பல  அன்யோன்யமான தகவல்களை  இதன் அறியமுடிகிறது.

பாரதியின் பிறப்பு தொடங்கி, இறப்பு வரை பல தகவல்களை அறிய முடிகிறது.

முதலில் யோகி சுத்தானந்த பாரதியாரது முன்னுரையிலிருந்து தொடங்கலாம்.  

"பாரதி வாக்கு, பராசக்தி வாக்கு.  அதன்  ஆற்றலுக்கு எல்லையில்லை. ..காலம் உள்ளளவும் பாடிக்கொண்டிருந்தாலும் பாரதி பாடல் தெவிட்டாது பாடப்பாட வீர விறுவிறுப்பும் ஆத்மக்கனாலும் உண்டாகும்."

"அவர் சொல் ஈகைக் கருடநிலை ஏற்றியது.  சிறுமையைச் ச்செர்மையாக்கியது.  அடிமைத் தலையை முறித்து, ஆண்மையைத் தந்தது.  அச்சப் பேயை  அடித்து விரட்டி நம்மைத் தலை நிமிர்ந்து நடக்கச் செய்தது.  தேசாவேசமும், தெய்வக்கனாலும், முன்னேற்ற எழுச்சியும் அளித்தது.  ஆதலால் பாரதியாரைச் சொல்வடிவாக நாம் என்றும் வழிபடக் கடமைப் பட்டிருக்கிறோம்."  

ஐந்து வயதுக்கு முன்னரே தாயை இழந்த பாரதி, பதினாலாம் வயதில் செல்லாம்மாலை மணந்தார்.  செல்லாமாளுக்கு அப்போது வயது ஏழு.  பதினைந்தாம் வயதில் பாரதி தன் தந்தையைப் பறிகொடுத்தார்.  அவரது மரணம் பாரதிக்கு மனத்துயரை அளித்தது.  அதைப்பற்றி அவர் 

தந்தை போயினான் - பாழ்மிடி சூழ்ந்தது 
தரணிமீதில்  இனி  அஞ்சலென்பார்  இலர்;
சிந்தையில்  தெளிவில்லை;  உடலினில் 
திறனும் இல்லை;  உரனுளத்து  இல்லையால்;
மாந்தர்பால்  பொருள்  போக்கிப்  பயின்றதாம்
மடமைக்  கல்வியில்  மண்ணும்  பயனிலை;  
எந்த மார்க்கமும்  தொன்றிளது என்  செய்கேன்? 
ஏன்  பிறந்தனன்  இத்துயர்  நாட்டினிலே? 

இத்தருணத்தில்  அத்தை குப்பம்மாள்  அழைக்க  காசி சென்றார்.  அவரது அத்தை பாரதியை பெற்ற பிள்ளைக்கும் மேலாகப் போற்றி வளர்த்தார்.  காசி கலாசாலையில் இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றைப் பயின்று சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்.  கங்கைக்கரையில் கவிதை புனைவது, இயற்கை அழகை ரசிப்பது, நண்பர்களுடன் படகுப் பயணம், ஜாதி வித்தியாசமின்றி அனைவருடனும் பழகுவது, அவர்களுடன் உண்பது என்று காசி வாழ்க்கை சென்றது.  தமது இருபதாவது வயதில் அவர் திரும்பினார்.  அது முதல்,  முப்பத்தொன்பதாவது வயதில் மறையும் வரை செல்லம்மாளுடன் வாழ்க்கை.  

மதுரை சேதுபதி கலாசாலையில் மூன்று மாதம் ஆசிரியப் பணி புரிந்தது,  பின் சென்னை சென்று சுதேசமித்திரன் பணி புரிந்தது, பாடல்கள், கட்டுரைகள் எழுதிக் குவித்தது, கடற்கரை பிரசங்கங்கள்,  பாடியது, வ.உ.சி.யின் நட்பு,  சூரத் மற்றும்  கல்கத்தாவில் நடந்த  காங்கிரஸ் மாநாடுகளில் கலந்துகொண்டு, திலகர் தலைமையில் அமிதவாதிகளின் பிரிவை காங்கிரஸ் கட்சியில் ஏற்படுத்தியது,  விவேகானந்தரின் சீடரான நிவேதிதா தேவியாரைச் சந்தித்து, அவரிடம் தீக்ஷை பெற்றது, ௧௯௦௭ ம் ஆண்டு முதல் இந்தியா பத்திரிகையில் பணி புரிந்தது, ௧௯௧௦ ல்  புதுவை சென்று அங்கு பத்து ஆண்டுகள் அரவிந்தர், வ.வே.சு. ஐயர் அவர்களோடு தேசிய, வேதாந்த சிந்தனையில் வாழ்ந்தது இப்படிப் பல சுவையான தகவல்களை  அறிய முடிகிறது.  

எத்தனையோ துன்பங்கள், துயரங்கள்;  சொல்லொணாத கஷ்டங்கள்;  மன உளைச்சல்கள் இருந்தபோதும்  அவரது தேசப்பற்றும், தமிழ்மொழிமேல்  அவர் கொண்டிருந்த மாளாக் காதலும் இறுதிவரை மறையவில்லை.  விரிந்த மனம், பரந்த பார்வை,  மேன்மையான இலட்சியங்கள் என்று வாழ்ந்து 1921ம் ஆண்டு செப்டம்பர் பதினோராம் நாள்  விண்ணுலகெய்தினார்.

மறக்கமுடியாத புத்தகம்!

14 ஆக., 2010

சூரியின் டைரி-23: வ.உ.சி. கண்ட பாரதி


வ.உ.சி. கண்ட பாரதி என்ற இந்நூல் வ.உ.சிதம்பரனார்  அவர்கள்  எழுதிய குறிப்புகளிலிருந்து மலர்வதாக இந்நூலின் முன்னுரையில்   வ.உ.சி. அவர்களின் மைந்தர் திரு வ.உ.சி.சுப்பிரமணியம் அவர்கள்  எழுதியுள்ளார்.  (முன்னுரையின் தேதி 1946 நவம்பர் பதினேழாம்  நாள்!)   இக்குறுநூலைப்  படித்து மகிழும் பேறு ஒரு பேருந்துப் பயணத்தின் போது வாய்த்தது.  முப்பதே பக்கங்கள் கொண்ட இந்நூலின் முதற் பதிப்பை  சென்னை  ஆருத் புக்ஸ்  2002ம் ஆண்டில் வெளியிட்டுள்ளது.  விலை ரூபாய் பத்து மட்டுமே.

 இந்த நூலைப் பற்றிப் பேசுமுன், ஒரு சுய புராணம்.  என் தந்தையார் தூத்துக்குடியில் பள்ளியில் பயின்றபோது இந்நூலாசிரியர் திரு வ.உ.சி.சுப்பிரமணியம் அவர்கள் அவரது பள்ளி நண்பர்.  வ.உ.சி. அவர்களின் இறுதித் தருணத்தில் தூத்துக்குடி காங்கிரஸ் மாளிகையில் குழுமியிருந்த கூட்டத்தில் தாமும் இருந்ததாகக் என் தந்தையார் கூறுவார்.  எனது தாய்வழிப் பாட்டி தங்கத்தம்மாளின்  சொந்த ஊர்  ஓட்டப்பிடாரம்.  என் பள்ளிப் பருவத்தில்  அவரிடம் ஒரு முறை வ.உ.சியைத் தெரியுமா, உங்கள் ஊர்க்காரர்  என்று கேட்டேன்.   'ஏலே, என்ன அப்பிடிக் கேட்டுப்பிட்டே.  அவுக எங்க மாமால.  எங்க வீட்டுக்குப் பக்கத்திலேதான் அவுக வீடு இருந்தது' என்றார்.

கப்பலோட்டிய தமிழன் என்ற ஒப்பற்ற தமிழ்த் திரைப்படம் பார்த்த அனைவருக்கும் வ.உ.சிக்கும் பாரதிக்கும் இருந்த இனிய உறவு தெளிவாகப் புரிந்திருக்கும்.  இந்த நூலில் அது வ.உ.சியின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. வ.உ.சி. பாரதியை மாமாவென்றும்,  பாரதி வ.உ.சியை மாப்பிள்ளை என்றும் அன்போடு உறவு பாராட்டி மகிழ்ந்தது, அவர்களது நெருக்கத்தைப்  பறைசாற்றுவதாக உள்ளது.  அது மட்டுமல்ல, இருவரின் தந்தையாரும் நண்பர்கள்.  அவர்கள் வழியே இருவரும் ஒருவரையொருவர் பார்ப்பதற்கு முன்னரே நன்கு அறிந்திருந்தனர்.  

வ.உ.சி. பாரதியை நேரில் பார்த்தது 1906ம் வருடம் சென்னையில் இந்திய பத்திரிக்கை உரிமையாளர் ஸ்ரீ திருமலாச்சாரியார் அவர்களது வீட்டில்.  அந்த சந்திப்பு இந்நூலில் வ.உ.சி. அவர்களது வார்த்தைகளிலேயே தரப்பட்டுள்ளது.  அவர்களது நட்பு எப்படி வளர்ந்தது, எப்படி நெருக்கம் அதிகமானது, வ.உ.சியின் உள்ளத்தில் நாட்டுப்பற்று சுடர் விட்டெரிய பாரதி எப்படி காரணமாயிருந்தார், இருவர் தேசப்பணியில் இணைந்து செயல்பட்டது, சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் லோகமான்ய திலகர், ஸ்ரீ அரவிந்தர் ஆகியோரோடு பாரதியும், வ.உ.சியும் இணைந்து மிதவாதிகளிடமிருந்து போராடிப் பிரிந்து தனி அமைப்பை உருவாக்கியது, சிதம்பரனார் அவர்கள் கிட்டத்தட்ட நான்காண்டுகள் சிறைவாசம் முடித்து, புதுவை சென்று பாரதியோடும், அரவிந்தரோடும்   அளவளாவி மகிழ்ந்தது, திட்டங்கள் தீட்டியது போன்ற சுவையான தகவல்களும் நமக்குத் தெரிய வருகின்றன. மேலும் வ.உ.சியின் தலைப்புதல்வன், அவரது தந்தையின் பெயரைச் சுமந்த உலகநாதன், தந்தையைப் போல் துணிவாகப் பேசுவதைப் பாராட்டி பாரதி "லோகநாயகி புதல்வன்"  என்ற தலைப்பில் கவி எழுதிக் கொடுத்ததையும், அது  அப்போது  சிறையிலிருந்த  வ.உ.சிக்கு அனுப்பப்பட்டதையும், அவர் அதைப் படித்து மகிழ்ந்ததையும், இருபத்துஇரண்டு வயதில் அந்த  உலகநாதன் மறைந்ததையும், அதைப்போல அந்தக் கவிதை காணாமல் போனதையும் அறியும்போது நம் மனம் நெகிழ்கிறது.  பாரதி, வ.உ.சி. இருவரும் தங்கள் வாழ்வில் அனுபவித்த இன்னல்கள் நம் மனதைப் பிழிகின்றன. 

பாரதி அன்பர்களும், வ.உ.சி. பற்றி அறிய விரும்பும் அன்பர்களுக்கும் இந்நூல் ஒரு தகவல் களஞ்சியம்.      

13 ஆக., 2010

இன்றைய சிந்தனைக்கு-115:

உள்ளக்கடலில்  இயன்றவரை மூழ்கு.  எத்தனைக்கெத்தனை  ஆழத்திலே போகிறாயோ, அத்தனைக்கத்தனை நல்முத்துக் கிடைக்கும்.  

சூரியின் டைரி-29: புதுவையில் பாரதி


பாரதி  நான்  போற்றி  வணங்கும் பெருந்தகைகளுள், மகான்களுள்  ஒருவர்.  அவரைப் பற்றிய நூல்களைத் தொகுத்து வருகிறேன்.  சமீபத்தில்  குருவாயூர்  விரைவு வண்டியில் குளிர்சாதன படுக்கை வசதி பெற்று திருச்சியிலிருந்து சென்னை வந்தேன்.  ரயிலில் புத்தகம் படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.  தொல்லையில்லாத சூழல், குறிப்பாக கூட்டமில்லாமல், எந்த இடையூறும் இல்லாமல் இருந்தால் நன்றாகப் படிக்கலாம்.  அதிலும்  தற்போது படிப்பதே சிரமமாகிப் போன இந்தத் தருணத்தில் ரயில் பயணத்தில் மட்டும் என்னால் நன்றாகப் படிக்க முடிகிறது. 

திரு.ப.கோதண்டராமன் அவர்கள் எழுதி பழனியப்பா பிரதர்ஸ்  வெளியிட்ட புதுவையில் பாரதி என்ற புத்தகத்தை முழுவதுமாக ரசித்துப் படிக்க முடிந்தது.  ஏற்கனவே 2007ல்  நான் படித்ததுதான் என்றாலும் மறுபடி படிக்கும்போது உன்னிப்பாக பல தகவல்களை அறியமுடிந்தது.  நிறைய ஆய்வு மேற்கொண்டு ஆசிரியர் சிறப்பாக எழுதியிருக்கிறார் என்பதை முதலில் கூறிவிட வேண்டும்.  பாரதி அன்பர்கள், பக்தர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒரு அருமையான நூல் இது.  

புதுவையில் பாரதி சில காலம் தங்கியிருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  ஆனால் அவர் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் அங்கே இருந்தார் என்பதை அறிய ஆச்சரியமாக இருந்தது.  அவர் உயிர் வாழ்ந்ததே முப்பத்தொன்பது ஆண்டுகள்தான் என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ளவேண்டும்.  அந்தப் பத்து ஆண்டுகளும் அவர் படைப்பாற்றலில் உச்சத்தில் இருந்த காலம்.  அவரது முக்கியமான படைப்புகள், அமர சிருஷ்டிகள் அனைத்தையும் அவர் உருவாக்கியது இந்தக் காலத்தில்தான்.  வேதாந்தப் பாடல்கள், சக்திப் பாடல்கள், பெண் விடுதலைப் பாடல்கள், சுய சரிதை, வசன கவிதை, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவற்றை அங்கேதான் படைத்தார்.  

அரவிந்தர் பாரதியாரைவிட பத்து வயது மூத்தவர்.  பாரதியார் அவரிடம் ரிக் வேதத்திலிருந்து  200 பாடல்கள் முறையாகக் கற்றுக் கொண்டு  அவற்றை  அடிப்படையாகக் கொண்டு தமிழில் பல பாடல்களை எழுதியுள்ளார்.  பாரதியார் அரவிந்தருக்குத்  தமிழைக் கற்றுக் கொடுத்தார்.  இருவரும் வேதாந்த  சிந்தனைகளைப்  பற்றி உரையாடினர்.  பாரதியார் ஆழ்வார்களின் பாடல்களைப் பாட, அரவிந்தர் அவற்றைக் கேட்டு மகிழ்வார்.  இப்படி அவர்களுக்குள்ளே ஒரு இனிய நட்பு இருந்தது. 

அரவிந்தர், வ.வே.சு.ஐயர், மண்டயம் ஸ்ரீநிவாச்சாரியார் ஆகியோருடன் உரையாடுவது பாரதியாருக்கு உற்சாகத்தை அளித்தது.  இவர்கள் கூடிப் பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது.  வறுமை, இரகசிய போலீஸ் இடைஞ்சல்கள் இவைகளால்  மனமுடைந்திருந்த தருணத்தில் இவர்களது தொடர்பு பாரதிக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.

இந்நூலில் பாரதியின் படைப்புகள் பலவற்றிலிருந்து பகுதிகளை எடுத்து இந்நூலாசிரியர் சிறப்பான  ஆய்வு செய்துள்ளார்.  இந்த ஆய்வுக் கருத்துக்கள் அனைவருக்கும், குறிப்பாக பாரதி பற்றி ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும்.

என்னிடமுள்ள இப்பிரதி இரண்டாம் பதிப்பு, 1990ம்  ஆண்டு வெளியிடப்பட்டது.  அப்போது அதன் விலை ரூபாய் இருபத்துஒன்று மட்டுமே.  நூற்று எண்பது பக்கங்கள் கொண்ட  இந்த நூல் அனைவரும் படித்து மகிழவேண்டிய ஒன்று. 

11 ஆக., 2010

சூரியின் டைரி-28: அகில இந்தியப் பயணம்-5


தில்லியிலிருந்து  எப்போது கிளம்பினோம் என்பது நினைவில்லை.  ஆனால் நாங்கள் அதிகாலை தாஜ்மஹாலிலிருந்தோம்.  பார்வையாளர்களுக்கு கதவு திறக்கப்பட்டதும் முதல் ஆட்களாக நாங்கள் உள்ளே சென்றோம்.  உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை நேரில் பார்க்கிறோம் என்பதை நினைக்க மகிழ்ச்சியாக இருந்தது.  உடன் பயணித்த நண்பரில் கோடாக்  கிளிக் த்ரீ காமெராவில் சில படங்கள் எடுத்தோம்.  அங்கிருந்த புகைப்படக்காரர்கள் பணம் கொடுத்தால் படம் எடுத்துத் தபாலில் அனுப்பவதாகக் கூற, அதிலும் ஒன்று படம் எடுத்துக் கொண்டேன்.  அந்தப் படம் மேலே.  தாஜ் மகாலின் உள்ளே ஷாஜஹான் மற்றும் மும்தாஜின்  கல்லறைகள்.  ஆனால் உண்மையான கல்லறைகள் அடித்தளத்தில் என்று அதையும் காட்டினார்கள்.  பின்புறம் யமுனை நதி.  அதில் அப்போது தண்ணீர் இருந்ததாக நினைவில்லை. 

அடுத்தது மதுரா.  சிலர் மட்டுமே கோவிலுக்குச் சென்றார்கள்.  நான் என்ன காரணத்தினாலோ செல்லவில்லை.  பிருந்தாவன் செல்ல பெரும்பான்மையோருக்கு விருப்பமில்லாததால் அங்கு நாங்கள் செல்லவில்லை.

 குருஷேத்திரத்தில் சூரி 

அடுத்துப் பயணம் எனக்குக் கோர்வையாக நினைவில்லை.  குருஷேத்திரம் சென்றோம்.  மகாபாரத யுத்தம் நடந்த இடம் என்று கூட்டிக்கொண்டுபோய்க்  காட்டினார்கள்.  அங்கே படம் எடுத்துக் கொண்டேன்.    அடுத்த வரும் வழியில் பெரிய தடாகம்.  குருஷேத்திரப் பல்கலைக்கழகம் என்று பேருந்தில் இருந்தபடியே பார்த்தவாறு சென்றோம்.


நாசிக் பஞ்சவடி.  அங்கும் தீர்த்தமாடல். அடுத்தது  மும்பை.  மும்பையில் தமிழ்ச்ச் சங்கத்தில் தங்கினோம்.   மகாலட்சுமி கோவிலுக்குச் சென்று வழிபட்டோம்.  அடுத்தது ஒரு மசூதியைக் காட்டினார்கள்.  கடல் பின்வாங்கும்போது மட்டும் அதனுள் செல்லலாம்.  அது போன்ற அமைப்பு.  பிரபல ஓபராய் ஷெராட்டன் ஹோட்டல்,  தாஜ்மஹால்  ஹோட்டல்,  கேட் வே  ஆஃப் இந்தியா.  இந்திய நுழைவாயிலிலிருந்து படகுப்பயணம்.  அப்போது எடுத்த படங்களில் ஒன்று மேலே.

மறுநாள் அதிகாலை கிளம்பி புனே, கோல்ஹாபூர்.  ஹரிஹர் என்ற ஊரில் பேருந்து பிரேக் டௌன்.    ஒரு நாள் பொழுது வீணானது.  பயணம் முழுதிலும்  இரவு பேருந்து ஓட்டப்படுவதில்லை.  அன்று இரவு மட்டும் பேருந்து தொடர்ந்து ஒட்டப்பட்டு, அதிகாலை பெங்களூர்  அடைந்தோம்.  அங்கே காலை உணவு.  எல்லோருக்கும் ஒரே சோர்வு.  யாருக்கும் பெங்களூரில் சுற்ற திராணியில்லை, விருப்பமுமில்லை.  அநேகமாக எல்லோருமே பெங்களூரை ஏற்கனவே பார்த்திருக்கலாம்.  எனவே விதான் சபாவை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு தமிழ்நாட்டை நோக்கி,  வீடு நோக்கி விரைந்தோம்.  வழியில் கரூர் என்று நினைக்கிறேன்.  மதியம்.  காவிரியில் நீராடி, இரவு மதுரை வந்தடைந்தோம்.

எவ்வளவோ இனிய அனுபவங்கள், காட்சிகள்.  ஆனால் அவற்றில் பல நினைவிலிருந்து காணாமல் போய்விட்டன.  வழியில் சகபயணி ஒருவரை குரங்கு கடிக்க, அதனால் மருத்துவமனை தேடி, பயண திசை மாறி, சிகிச்சை பெற்று, அப்புறம் பயணம் தொடர்ந்தோம்.  வழியில் பல இடங்களில் விபத்துக் காட்சிகள்.  அப்போதெல்லாம் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்ற கோஷத்துடன் விபத்தில் சிக்கியவர்களுக்காகப்  பிரார்த்தனை.    முப்பத்து இரண்டு ஆண்டுகள் கடந்தபின் நினைமட்டுமே நம்பி இந்தக் குறிப்புகளை எழுதியுள்ளேன் என்பதை அன்பர்கள் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  ஏதாவது விடுபட்டுப்போனது நினைவிற்கு வந்தால் அதனைப் பின்னர் பதிவு செய்கிறேன்.  நன்றி, வணக்கம்!

9 ஆக., 2010

சூரியின் டைரி-27: அகில இந்தியப் பயணம்-4




தில்லியில்  இரண்டாம் நாள்  தீன்மூர்த்தி பவன்.  பாரதத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு வாழ்ந்த இல்லம்.  இன்று  அவரது நினைவு இல்லம்.  கட்டணம் செலுத்தி வீடு முழுவதையும் சுற்றிப் பார்த்தோம்.  அவரது படுக்கையறையில் அவர் இறுதியாக  வாசித்த நூல்கள் படுக்கை அருகிலேயே இருந்தன.  தீன்மூர்த்தி பவனில் நான் எடுத்துக் கொண்ட படம் மேலே.

அடுத்தது குதுப்மினார். பத்தாம் நூற்றாண்டிலேயே துருப்பிடிக்காத தூண்களைக் கட்டியவர்கள் இல்லையா நாம் என்று பெருமையுடன்  தி.சா.ராஜூ குறிப்பிட்டுச் சொன்ன தூண்கள் இங்கேதான். உலோகத் துறையில் நாம் எவ்வளவு சிறந்த நிலையில் இருந்தோம் என்பதற்கு இன்றும் சான்றாக இருக்கிறது.  மேலே செல்வதற்குப் பெரிய கியூ.  எனவே மேலே செல்லமுடியவில்லை.  அங்கே எடுத்துக் கொண்ட படம் மேலே. 

இந்தியா  கேட்டில்  எடுத்துக்  கொண்ட  படம்  காணவில்லை.   ராஷ்ட்ரபதி பவனுக்கு முன் நான் நிற்கும் படம் மேலே.  பல படங்களில் நான் ஒரு ஓலைத் தொப்பி அணிந்திருப்பதைப் பார்க்கலாம்.  ஏப்ரல்-மே மாதமில்லையா, அதற்காக நான் ஹைதராபாத்தில் வாங்கிய தொப்பி அது.  சக பயணி ஒருவர் தொப்பியுடன் உங்களைப் பார்த்தால் கேரி  கூப்பர் போலிருக்கிறது என்று கிண்டலடித்தார்.

நாங்கள் செங்கோட்டைக்குச் சென்றபோது எனக்கு உடல் நிலை  சரியில்லை.  எனவே கோட்டைக்குள் செல்லவில்லை.  அதனால் எதுவும் பார்க்க முடியாமல் போனது.  ஆனாலும் கோட்டையின் முன் நின்று ஒரு படம் எடுத்துக்கொண்டேன்.  (அது மேலே).

அன்று மாலை என்னுடன் காரைக்குடியில் பணிபுரிந்த பாரத் பிரசாத் என்ற நண்பர் கல்வி அமைச்சகத்தில் செக்ஷன் ஆபீசராக இருந்தார்.  ராமகிருஷ்ணபுரத்தில் அவரது வீட்டைத் தேடி கண்டுபிடித்தேன்.  அவர் வீட்டில் சிறப்பாக வெஜிடபிள் புலாவ் சாப்பிட்டேன். அடுத்த நாள் அவருடன் சாந்தினி சௌக் சென்று சிறு சிறு பொருட்கள் வாங்கினேன்.      

 அடுத்த நாள் அதிகாலை தாஜ் மகாலைக் காணப் புறப்பட்டோம்.  அது  அடுத்த பதிவில்.

சூரியின் டைரி-26: அகில இந்தியப் பயணம்-3


இரவில்  தில்லிக்குச்  சற்று  வெளியே  ஒரு  பெட்ரோல்  பங்கில்  உறக்கம் .  பொழுது  புலருமுன்  கிளம்பினோம்.  பொழுது புலரும் அந்த இனிய காட்சியை என்னால் மறக்க முடியாது. புது தில்லியின் அந்த பரந்த வெளிகளில், இதமான இளம் பனியில்  நடை பழகுவோர், குதிநடை புரிவோர் என்று ஆங்காங்கே மக்கள்.  முதலில் ராஜ் காட் சென்று காந்தி மகானது சமாதியில் வழிபட்டோம்.  அடுத்து நேரு, சாஸ்திரி சமாதிகள் முடித்து தங்குமிடமான ஹிந்து மகா சபாவிற்குச் சொந்தமான ஒரு இடம்.  குளித்துக் காலை உணவை முடித்து பிரதமர் இல்லம் சென்றோம்.  அங்கே பார்வையாளர்களை தனித்தனி குழுக்களாக அமரச் செய்தனர் பாதுகாவலர்கள்.  ஒவ்வொரு குழு அருகிலும் பிரதமர் மொரார்ஜி தேசாய் வந்து நிற்க புகைப்படம் எடுக்கப்பட்டது.  எங்கள் குழு அருகே அவர் வந்ததே தெரியாது.  புகைப்படம் அதற்குள் எடுத்து முடித்துவிட்டார்கள்.  படத்தை மதுரை வந்துதான் பார்த்தேன்.  (எங்களுக்கு முன்னதாக படம் மதுரை வந்துவிட்டது).  (அப்படம் மேலே).

அடுத்து திருமதி இந்திரா காந்தியின் இல்லம்.  தேர்தலில் தோற்று அப்போது அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லை.  முன்னால் பிரதமர் என்ற அந்தஸ்து மட்டும்தான்.  ஆனால் அங்கும் பார்வையாளர் கூட்டம், பிரதமர் இல்லம்போல்.  சிறிது நேரத்தில் அவர் வந்து எங்களது குழு மேலாளரிடம் சிரித்துப் பேசினர், விசாரித்தார்.  ஸ்ரீநகர் சென்று வந்ததைக் கேட்டதும், பஹல்காம்  சென்றீர்களா என்று கேட்டார்.  அடுத்த முறை கண்டிப்பாகப் பாருங்கள், பார்க்க வேண்டிய இடம் என்றார்.  நாங்கள் அழைத்துச் சென்றிருந்த புகைப்படக்காரர் மூன்று முறை படம் சரியாக எடுக்க முடியாமல் கோட்டை விட, அதற்கு மேல் அவகாசமில்லாமல்,  'ஸாரி!' சொல்லிவிட்டு, சிரித்தபடியே அடுத்த கூட்டத்தை நோக்கி நகர்ந்தார் இந்திரா.

அடுத்தது காந்தி நினைவு வளாகம்.  கோட்சேயால் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட இடம்.  அங்கே அந்த இடத்தில் வரைந்து வைத்திருந்தார்கள்.  புரியாமை, சகிப்புத்தன்மையின்மை, வன்முறை, தீவிரவாதம் இப்படிப்பட்ட கொடுமைகளால் உலகில் எவ்வளவு துன்பம்.  சிறு சிறு கூட்டங்கள் மனித சமுதாயத்தையே அச்சுறுத்தும் கொடுமை, அதற்குப் பதில் தரமுடியாத துயரம்.  இந்தக் கொலைகாரர்களுக்கு  ஆதரவாக சில மேதைகள்.  வன்முறையாளர்களின்  மனித உரிமை பற்றி இந்த அறிவாளிகள், பெரியவர்கள்   பேசும்போது, இந்தத் தீவிரவாதிகளால் நேரடியாகப்  பாதிக்கப்பட்டவர்கள்,  இந்த தீவிரவாதச் சம்பவங்களால் அல்லலுறும் அப்பாவிப் பொதுமக்கள் இவர்களுக்கெல்லாம் உரிமை எதுவும் கிடையாதா என்று கேட்கத் தோன்றுகிறது.

அடுத்த நாள் தில்லி செங்கோட்டை, குதுப்மினார், தீன்மூர்த்தி பவன்.  இதை நாளைப் பதிவு செய்கிறேன்.     

8 ஆக., 2010

சூரியின் டைரி-25: அகில இந்தியப் பயணம்-2




அயோத்தியா.  சர்ச்சைக்குரிய பூமி.  நாங்கள் ஒரு மதியம் அங்கு போய்ச் சேர்ந்தோம். நுழையும் இடத்திலேயே ஒரு பெரிய கோவில்(படம் மேலே). நாங்கள் தங்கிய இடம் நகரத்தார் சத்திரம்.  அது  ஒரு பழங்காலக் கட்டிடம்.  பொருட்களை வைத்துவிட்டு  சரயூ நதியில் தீர்த்தமாடச் சென்றோம்.  அங்கே கரையோரம் பிணம் ஒன்று எரிந்து கொண்டிருந்தது.  அகண்ட காவிரியை நினைவு படுத்தும் பெரிய  ஆறு.  அதில்  புதிய பிரம்மாண்டமான  சாலைப் பாலம்.  அங்கிருந்து பிர்லா மந்திர் என்று நினைக்கிறேன்.  சலவைக் கல்லில் ஆன  ராமர் ஆலயம்.  அப்போது சொன்னார்கள்.  அயோத்திய முழுவதும் இது போன்று பல பேர் கோவில்களையும், சாத்திரங்களையும் கட்டி வைத்துள்ளனர்.  யாத்ரீகர்களுக்கு இலவச தங்குமிடம் மற்றும் இலவச உணவு.  அப்படியென்றால் தேவையில்லாமல் ஏன் பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டத் துடிக்கிறார்கள்?  புரியவில்லை.  அடுத்து  அங்கேதான் சென்றோம் - பாபர் மசூதி.   கதவு சாத்தப்பட்டு  அரக்கு சீல் வைத்திருந்தார்கள் வெளியிலிருந்தே பார்த்தோம்.  அருகே பந்தலில் அகண்ட நாம பஜன் - ராமர்  மேல் பக்தர் கூட்டம் பஜனை செய்துகொண்டிருந்தது.  எவ்வளவோ ஆண்டுகளாக இடைவிடாமல், தினமும் இருபத்து நான்கு மணி நேரமும் பக்தர் கூட்டம் மாறி மாறி வந்து பஜனை செய்வதாக.  எப்படியாவது பாபர் மசூதியை அழித்து, அங்கே ராமர் கோவிலைக் கட்டவேண்டும் என்று அவர்கள் போராடுவதாகச் சொன்னார்கள்.  (பின்னர் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த காலத்தில் மசூதியை அழித்தே விட்டார்கள்.  அதனால் எத்தனை வன்முறைகள்.  உலக அரங்கில் இந்தியாவின் பெயர் எவ்வளவு தாழ்ந்தது!  மக்களின் அறியாமையும், கண்மூடித்தனமான பக்தியையும் பயன்படுத்திக் கொண்டு அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.  அவர்களுக்கு தங்கல் சுய லாபம்தான் முக்கியம், வேறு எதுவே முக்கியமில்லை. மற்ற விளைவுகளைப் பற்றி அவர்கள் நினைப்பதும் இல்லை, கவலைப் படுவதும் இல்லை.  இது இந்த நாட்டின் சாபக் கேடு.

அடுத்து பதான்கோட் வழியே ஜம்மு சென்றோம் என்று நினைக்கிறேன்.  ஜம்முவில் இரவு தங்கல்.  எனக்கும் என்னுடன் வந்த இரு அன்பர்களுக்கும் தோசை சாப்பிடும் ஆசை வர, ஜம்முவில் கிடைக்கும் என ஒருவர் கூற, நாங்கள் தென்னிந்தியா உணவு கிடைக்கும் விடுதியைத் தேடி அலைந்து ஒரு வழியாகக் கண்டுபிடித்து, தோசை ஆர்டர் செய்தோம்.  புளித்த தோசை, ரெடிமேட் தேங்காய் சட்னி, தண்ணீர் சாம்பார் என்று ஒரு பாடாவதி டிஃபனை  சாபிட்டோம்.  

மறுநாள் காலை  அரசு மினிப்பேருந்தில் இரண்டு பிரிவாகப் பிரிந்து ஸ்ரீநகருக்குப்  பயணமானோம்.   வழியில் உத்தம்பூரில் சீஸ் வடை சாப்பிட்டு, வாழ்வில் முதல்முறையாக பேருந்தில் வாந்தி எடுத்தேன்.  கடுகு எண்ணெயில் செய்த வடை.  ஒரே எண்ணெய் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்படுவதால் எல்லோருக்கும் ஒத்துக்கொள்வதில்லை என்று சொன்னார்கள்.  வழியில் பாசுமதி அரிசி உணவு.  ஸ்ரீ நகர் சென்றபோது இருட்டிவிட்டது.  ஜீலம் நதிக்கரையில் ஒரு விடுதியில் டார்மிட்டரியில் முன்பதிவு செய்திருந்தார்கள்.  கம்பளி வாடகைக்குக் கொடுத்தார்கள்.  எனினும் அந்தக் கோடையிலும் குளிர் கொன்று எடுத்துவிட்டது.

அடுத்த நாள் காலை வெந்நீரில் குளித்துவிட்டுக் கிளம்பினோம்.  அதற்குள் சீதோஷ்ணநிலை மாறி சுகமான இளம் வெயில்.  ஷிகார் எனப்படும் சிறு படகுகளில் இருவர் இருவராக  பயணம் செய்தோம்.  சுகமான அனுபவம்.  (படம் மேலே)  ஜீலம் நதியில் தொடங்கி தால் ஏரிக்குப் படகு சென்றது.  இரண்டுக்கும் நீர் மட்ட வேறுபாடு காரணமாக இரட்டை மதகுகள்.  முதல் மதகு    திறக்கப்பட்டவுடன் படகுகள் உள்ளே செல்லும்.  அந்த மதகு மூடப்படும்.  நீர் மட்டத்தை மாற்றி அடுத்த மதகைத் திறப்பர்.  படகுகள் ஏரிக்குள் செல்லும்.

வழியெங்கும் படகு வீடுகள்.  எல்லாமே படகில்தான்.  சுத்தம் என்றால் என்னவென்று கேட்கும் நிலை.   ஏரி நடுவில் ஒரு பூங்கா. (நேரு பூங்கா?)  அங்கே ஒரு சிற்றுண்டி விடுதி.  அங்கே தேநீர்  அருந்தினோம். பின்னர் அங்கிருந்து ஷாலிமார் பாக் எனப்படும் ஷாலிமார் பூங்காவிற்குச் சென்றோம்.  படகு சவாரியை முடித்துவிட்டு விடுத்திக்கு வரும்போது மாலையாகி விட்டது.  ஏதாவது வாங்கலாம் என்று சக பயணிகளுடன் கடைவீதிக்குச் சென்றோம்.  நான் ஒன்றும் வாங்கவில்லை. வேடிக்கை பார்த்துவிட்டுத் திரும்பிவிட்டேன்.  அங்கே ஒரு வியாபாரியின் வீட்டில் குங்குமப்பூ தேநீர் அருந்தியதை  மறக்க முடியாது.

அடுத்த நாள் காலை ஜம்மு செல்ல, வேரிநாக் எனப்படும் ஜீலம் நதி உற்பத்தியாகும் இடம் வழியே சென்றோம்.  ஒரு தடாகத்திலிருந்து ஊற்றாக நதி உருவாகிறது.  வழியெங்கும் சிற்றோடைகள் சேர பெரிய நதியாக உருவெடுக்கிறது.  (அந்தத் தடாகத்தின் அருகே எடுத்த படம் மேலே).  ஜம்முவில் இராத் தங்கல்.  மறுநாள் காலை தில்லி பயணம்.  அதை நாளை எழுதுகிறேன்.          

6 ஆக., 2010

சூரியின் டைரி-24: அகில இந்தியப் பயணம்-1


1978 ம் வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் என்று நினைக்கிறேன்.  மதுரையிலிருந்து பேருந்தில் காஷ்மீர் ஸ்ரீநகர் வரை 23 நாட்கள் பயணம் என்று மதுரை ஸ்ரீகுமரன் ட்ராவல்ஸ் ஏற்பாடு செய்திருந்தனர்.  அவர்கள் முப்பது நாற்பது முறை இதுபோன்ற பயணங்கள் நடத்தியிருக்கின்றனர் என்று அறிந்து, அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த யாத்திரையில் கலந்துகொள்வது என முடிவெடுத்தேன்.  அப்போது எனக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை.  இந்த பயணத்தில் முக்கியமான குறை ஒரு நல்ல கேமராவும், ஒரு குறிப்பேடும் எடுத்துச் செல்லாததும், எதையுமே உடனுக்குடன் பதிவு செய்யாததும்.  எத்தனையோ இனிய காட்சிகள், சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்.  பதிவு செய்யாததால் பெரும்பாலானவை விடுபடுகின்றன.  முற்றிலும் நினைவிலிருந்தே இந்த அனுபவங்களை எழுதுகிறேன். ஆகவே தவறுகள் இருக்க வாய்ப்புண்டு, பொறுத்தருள்க! 

முதல் நாள் இரவே மதுரை சென்று வடக்குச் சித்திரை வீதியில் (?) இருந்த அவர்கள் அலுவலகத்திற்குச் சென்றேன். அடுத்தாற்போலிருந்த   விடுதியில் தங்கினேன். காலை நான்கு மணிக்கு முன்னதாக எழுந்து குளித்துத் தயாரானேன்.  கேரளாவிலிருந்து ஒரு சூப்பர் டீலக்ஸ் பேருந்து வந்திருந்தது. (அந்தப் பேருந்தின் முன்னே  ஏதோ ஒரு  ஊரில்  எடுத்துக்கொண்ட படம் மேலே)  இரண்டு ஓட்டுனர்கள். இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.  காலை ஐந்து மணிக்கு மதுரையைவிட்டு பேருந்து கிளம்பியது.  கிளம்பும்போதே ட்ராவல்ஸ் உரிமையாளர் (அவரும் எங்களுடன் பயணித்தார்) கூறினார்.  இனிமையான பயணத்தை முடித்து நல்லபடியாக ஊர் திரும்ப இறைவனைப் பிரார்த்திப்போம் என்று.  இறை நம்பிக்கை உள்ளவர்கள் அவரது பிரார்த்தனையில் கலந்துகொள்ளலாம் என்றார்.  "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்ற முழக்கத்தோடு பேருந்து கிளம்பியது.  வழியில் எங்காவது விபத்துக்களைக் கண்டாலும் உடனே இந்த வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம்தான்.

திருச்சியில் காலை உணவு.  மதிய உணவு வந்தவாசியில்.  அங்கிருந்து காஞ்சீபுரம்.  காமாட்சி அம்மன் கோவில் நடை திறக்க தாமதமாகும் என்பதால் வெளியிலிருந்தே கும்பிட்டுவிட்டு, திருத்தணிக்குக் கிளம்பினோம்.  திருத்தணி தேவஸ்தான விடுதியில் பொருட்களை வைத்துவிட்டு, திருத்தணி முருகனை வழிபாட்டு வந்தோம்.  இரவு உணவிற்குப்பின் உறக்கம்.  அதிகாலை குளித்துவிட்டுக் கிளம்பினோம்.  நேரே காளஹஸ்தி.

இங்கே நான் ஒன்றைக் குறிப்பிடவேண்டும்.  அப்போதெல்லாம் எனக்கு பக்தி என்று பெரிதாக எதுவும் இல்லை.  எல்லாமே அரைகுறைதான்.  காளஹஸ்தியில் வழிபாட்டிற்குப்பின் வெளியே வரும்போது எங்களுடன் வந்த அன்பர் ஒருவர்  கோபுரங்களில்  (பிரகாரத்தில்?) காமசூத்திரத்தின் அறுபத்து நான்கு கலைகளும் சிற்பங்களாக இருப்பதாகக் கூறவே அதைப் பார்க்க தனியே ஒரு கூட்டம் சேர்ந்தது.

காலை உணவு காளஹஸ்தியில்.  அங்கிருந்து நெல்லூர்.  அங்கு மதிய உணவு.  ஆந்திரா காரம் என்றால் என்னவென்பதை அங்கேதான் உணர்ந்தேன். மற்றபடி  பொடி அரிசி, சுவையான காய்கறிகள்  என்று சிறப்பான சாப்பாடு.  அங்கிருந்து இரவு தங்க நாகார்ஜுனசாகர் அணைக்கட்டில் ஒரு திறந்தவெளி மணடபத்தில் தங்கல். உணவும் அங்கேயேதான்.

காலை எழுந்து, துங்கபத்திரா நதியில் புனித நீராடி, காலை உணவு முடித்துக் கிளம்பினோம்.  நேரே ஹைதராபாத் சாலார் ஜங் அருங்காட்சியகம்.  பிரமிக்கவைக்கும் ஒரு  அரும்பொருள் திரட்டு.  முழுமையாகக் காண்பதற்கு எங்களுக்கு நேரம் போதவில்லை.  அடுத்து சார்மினார்.  சார்மினார் என்றால் நான்கு கோபுரங்கள் என்று பொருள்.  உலகப் புகழ்பெற்ற இதை அனைவரும் அறிந்திருப்பீர்கள், படங்களில் பார்த்திருப்பீர்கள்.  நாங்கள் மேலே செல்லவில்லை.

இரவு வழியில் எங்கோ தங்கினோம்.  மறுநாள்  ஏதோ ஓடையில் குளித்தோம்.  அடுத்து என் நினைவிற்கு வருவது காசி நகரை நோக்கிய பயணம்.  இருள் சூழ ஆரம்பித்திருந்தது. பெரிய, அகண்ட சாலை.   வழியில் பல சாலை உணவு விடுதிகள் (இன்றைய 'தாபாக்கள்?').  ஒவ்வொரு உணவு விடுதியின் முன்னும் நிறைய கயிற்றுக் கட்டில்கள். லாரி ஓட்டுனர்கள் இரவில் தூக்கம் வந்தால் ஏதாவது ஒரு உணவு விடுதியின் கயிற்றுக் கட்டிலில் படுத்துறங்கிவிட்டு, விழித்தபின் அங்கேயே உணவருந்திவிட்டு பயணத்தைத் தொடர்வது வழக்கம் என்று சொன்னார்கள்.  இரவு ஒன்பது மணி சுமாருக்கு காசியை அடைந்தோம். அங்கே முத்துக்குமாரசாமி மடம் என்று நினைக்கிறேன்; அங்கே தங்கினோம்.   காசி, வாரணாசி, பனாரஸ் என்று பல பெயர்களில் வழங்கும் இந்துக்களின் மிகப் புனித நகர்.  அங்கே இறந்தால்  மறுபிறவியில்லை    என்ற நம்பிக்கை.  கங்கைக் கரையில் பல படித்துறைகள்.  ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு 'காட்' (ghat) என்று பெயர்.  அரிச்சந்திராகாட், தசாஸ்மேவகாட்   என்று பல படித்துறைகள்.  நான் கடவுள் திரைப்படத்தில் பல வருகின்றன.

மறுநாள் காலை புனித கங்கையில் குளித்துவிட்டு, படகு சவாரி.  ஆலய தரிசனங்கள்.  வழிபாடுகள்.  தர்ப்பணம் செய்வோர் தர்ப்பணம்.  அப்புறம் காசியில் சிறப்பாகக் கிடைக்கும் காசிப்பட்டு போன்ற பொருட்களை வாங்க சிறு சிறு குழுக்களாகக் கிளம்பினர்.  நாங்கள் ஒரு சிறு குழு குதிரை வண்டியில்  வாரணாசி ரயில் நிலையம் சென்றோம்.   வழியில் சாலப் பராமரிப்பு நடந்துகொண்டிருந்தது.  அங்கே  'உங்கள் வரிப்பணம், இங்கே செயல்படுகிறது'  என்று  அறிவிப்புப் பலகை.

அடுத்த நாள் சாரநாத் சென்றோம்.  புத்த பிரான்  நிறுவிய சங்கம்.  புகழ்பெற்ற சாரநாத் ஸ்தூபி.  வற்றலாற்றுப் பாடத்தில் படித்த பலவற்றை கண்கூடாகக் கண்டோம்.

காசியில் இரண்டு நாளோ, மூன்று நாளோ  குமாரசாமி மடத்தில்(?) தங்கினோம்.  அடுத்து அலஹாபாத்.  நேரு குடும்பத்தினரின் ஆனந்த பவனத்தில் அருங்காட்சியகம்.  (அங்கே எடுத்த படம் மேலே)  திருவேணி சங்கமம் நோக்கிச் சென்றோம்.  புனித நதிகளான கங்கையும், யமுனையும் அதோடு கண்ணுக்தெரியாத சரஸ்வதியும் ஆக மூன்று நதிகளின் புனித சங்கமம். புனித நீராடல்.  வழிபாடு.

அடுத்து ஹரித்வாரம்.  ஹரித்வாரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கட்டிய சத்திரத்தில் தங்கல்.  (பெருமாள் செட்டி சத்திரம்?)  கங்கைக் கரையில் அந்த சத்திரம்.  கட்டிடடத்தின்  இரும்புக்கிராதியிட்ட   அடித்தளத்தில் கங்கை நதி வீட்டிற்குள்ளேயே வருகிறது.  அந்தக் கோடையிலும் தொட்டால் கைகள் விறைத்துவிடும் அளவிற்கு நீர் ஜில்லென்று இருந்தது.  பணி உருகி நீராக வருவதால் இருக்கலாம்.  ஹரித்துவாரில் 'ஹரி கி பைரி' (மகாவிஷ்ணுவின் திருவடிகள்) என்ற மிகப் புனிதமான இடத்தில் கங்கையில் குளித்தோம்.  கரை முழுவதும் கடைகள்.  ஹரித்துவார் எனக்கு மிகவும் பிடித்தது.  (பின்னர் பல ஆண்டுகள் கழித்து அருகாமையில் பல நாட்கள் தாங்கும் வாய்ப்புக் கிடைத்தது. நான்காண்டுகளுக்கு முன் மூன்றாம் முறையும் அங்கே செல்லும் அரிய வாய்ப்புக் கிட்டியது.)

அங்கிருந்து  ரிஷிகேஷத்திற்கும்,  லக்ஷ்மண்  ஜூலாவின் மறுபுறமிருந்த ஆலயத்திற்கும் சென்று வந்தோம்.  வழியில் சிவானந்தரின் அஷ்ராமத்தை வெளியிலிருந்தே பார்த்தோம்.  கால அவகாசம் கருதியும், யாருக்கும் அதிலே ஆர்வமில்லாததாலும்  உள்ளே சென்று பார்க்கவில்லை.  இரவு உணவிற்கும், உறக்கத்திற்கும் மறுபடியும் ஹரித்துவார்.(மேலே முதல் படத்தில் லக்ஷ்மண்ஜூலாவில்  சூரியும் ஒரு சக பயணியும்)  

அடுத்து சர்ச்சைக்குரிய  அயோத்தியா.  இப்பதிவு நீண்டுவிட்டபடியால் இங்கே நிறுத்திக்கொண்டு, நாளை புதிய பதிவாகத் தொடர்வேன்.  (இரண்டாவது படத்தில் அயோத்யாவில்  ஒரு  கோவில்).
 

5 ஆக., 2010

சூரியின் டைரி-23: குறள் நெறி வாழ்க்கை


மனிதமேம்பாட்டு அறிவியல் அமைப்பின் சார்பாக நாங்கள் நடத்திய ஒரு தமிழ்க் கருத்தரங்கத்தைக் கண்ட பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் எங்களை அவர்களது பலகலைக்கழகத்தில் ஒரு தமிழ்க் கருத்தரங்கம் நடத்தும்படி அன்புடன் கேட்டுக்கொண்டார்.  அதன்படி "குறள் நெறி வாழ்க்கை" என்ற தலைப்பில் ஒரு தமிழ்க் கருத்தரங்கத்தை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடத்த இசைந்தோம்.  அந்தப் பேராசிரியர் அனைத்து ஏற்பாடுகளையும் அவரே செய்வதாகவும், நாங்கள் சிறப்பு பேச்சாளர்களுடன் வந்து கருத்தரங்கத்தை மட்டும் நடத்தினால் போதும் என்று கூறியிருந்தார்.  அதன்படி குறிப்பிட்ட நாளில் நாங்கள் அனைவரும் பல்கலைக்கழக வளாகத்தை அடைந்தோம்.  கருத்தரங்கம் நடப்பதற்கான எந்த அறிகுறியும் காணாமல் திகைத்தோம்.  வாசலில் இருந்த காவலாளிக்கு அது பற்றி எதுவுமே தெரியவில்லை.  எங்களை வரவேற்கவும் அங்கே யாரும் இல்லை.  சுற்றிச் சுற்றி வந்ததில் கடைசியில் ஒரு விரிவுரையாளர் தென்பட்டார்.  அவர் எங்களை விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்றார்.  அந்தப் பேராசிரியர் பற்றி வினவியதில் அவர் திருச்சிக்கு எங்களுக்கு உணவைக் கொண்டுவரச் சென்றிருப்பதாகச் சொன்னார்.  மேலும் மாணவர்கள் ஏதோ பிரச்சினை காரணமாக பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் புறக்கணிப்பதாயும், பேச்சு வார்த்தை நடப்பதாகவும் கூறினார்.  அதனால்தான் உணவு பல்கலைக்கழக மெஸ்ஸில் ஏற்பாடு செய்யமுடியவில்லை என்றார்.  கருத்தரங்கம் நடக்குமா என்பதே சந்தேகமாக இருந்தது.  பல்கலை அரங்கம் மிகப் பெரியது. யாரும் இல்லாமல் அங்கே எப்படி கருத்தரங்கத்தை நடத்துவது? ஒரு நாள் கருத்தரங்கத்தை அரை நாள் கருத்தரங்கமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.  திருச்சி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேலாண்மைப் பிரிவு, கணினிப் பிரிவு மாணவர்கள் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர்.  அரங்கமே நிறைந்தது!  ஆனால் அந்த மாணவர்களுக்கு கருத்தரங்கத்தில் ஆர்வம் இருப்பதுபோல் தெரியவில்லை.  ஏதோ கட்டாயத்தின் பேரில் வந்ததுபோல் தோன்றியது. 

ஒருவாறாக, கருத்தரங்கம் ஆரம்பமானது.  துணைவேந்தர் வரமாட்டார் என்று கூறப்பட்டது.  ஆனால் இறுதியில் அவரும் வந்து துவக்கவுரை நிகழ்த்தி சிறப்பித்தார்.  அடுத்து எங்கள் அமைப்பின் தலைமைப்புரவலர் முனைவர் மீ.இராகவன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.

குறள் நெறி வாழ்க்கை பற்றி பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியன் (காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்), பேராசிரியர் எஸ்.இரகுநாதன் (இயக்குனர், கணினி மையம், அழகப்பா பல்கலைக்கழகம்), புலவர் இளங்குமரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இறுதியில் எல்லாமே நல்லபடியாக முடிந்தது.  நாங்கள் சிலர் மட்டும் புலவர் இளங்குமரன் அவர்களது திருவள்ளுவர் தவச்சாலை மற்றும்  திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் சென்று வந்தோம்.

இந்தக் கருத்தரங்கம் எங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்.  எனவே அது என் நினைவில் பதிந்துவிட்டது.  அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இரண்டு மட்டும் என்னிடம் இருந்தது.  முதலாவது புலவர் இளங்குமரன் அவர்கள் சிறப்புரையாற்றியது. அடுத்தது பேராசிரியர் பாலசுப்பிரமணியம் அவர்கள் சிறப்புரையாற்றியது.  இரண்டையும் மேலே பதிவு செய்துள்ளேன்.     

4 ஆக., 2010

சூரியின் டைரி-22: பொதுவாழ்வில் சூரி



அலுவலகத்தில்  சேர்ந்து  நான்கைந்து  ஆண்டுகளுக்குப்பின்  பொது வாழ்க்கையில் ஈடு படலாம் என்ற ஒரு கிறுக்குத்தனமான எண்ணம் தோன்றியது.  கிறுக்குத்தனம் என்று சொல்வதன் காரணம் என் பிரச்சினைகளே  தலையைப் பிய்த்துக் கொள்ளும் அளவு.  அப்படியிருக்க பொது வாழ்க்கை ஒரு கேடா என்பதுதான்.  உண்மையைச் சொல்லப்போனால் இது ஒருவகையான  தப்பித்தல் (escapism) என்றுகூடக் கொள்ளலாம்.  

முதலில் அலுவலக மனமகிழ் மன்றம்.  அதில் பலவேறு பொறுப்புகளில் பல நிகழ்ச்சிகளை புதிது புதிதாக நிறையச் செய்தேன். நூலக வார விழா - கவியரங்கம், பட்டி மன்றம், கண்காட்சி, பேச்சுப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் இப்படிப் பல நிகழ்ச்சிகள்.  வெளிநாட்டு தூதரக அமைப்புகளிலிருந்து விதம் விதமான டாக்குமெண்டரி படங்கள் (டிவி வராத காலம் அது)(அலுவலகமும், அலுவலகக் குடியிருப்பும் ஊருக்கே வெளியே நான்கைந்து கிலோமீட்டர் தொலைவில்).  அப்புறம் அடிக்கடி 16 எம்.எம். படங்களை அலுவலக அரங்கில் திரையிடுவது.  ஒப்பற்ற நூலகத்தை உருவாக்கியது (இரண்டு மூன்றாண்டுகளில் நூலகத்தில் புத்தகங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கைத் தாண்டியது.  ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆங்கில, தமிழ் இதழ்கள். இப்படி செயல்படும்போது சில கால்களில் இடறி, நிறைய வம்புகளில் மாட்டிக்கொண்டேன். அப்புறம் தலையைக் கழட்டினால் போதும் என்று வெளியேறும் நிலை.  

அடுத்து அலுவலக காண்டீன்.  அங்கும் நிறைய மாற்றங்கள், புதுமைகள் செய்தேன்.  நெடுநாள் பிரச்சினைகளைத் தீர்த்தேன்.  ஆனால் இங்கும் பிரச்சினைகள் வர, ஒதுங்கினேன்.

திருமணம் ஆன பின்  மனைவிக்காக ஹோமியோபதி மருந்து வாங்கச் சென்றபோது அதைப் பயில வாய்ப்பிருப்பதை அறிந்து பயில ஆரம்பித்தேன்.  அதன் மேன்மை தெரிந்ததும் அதில் பைத்தியமாகி, அதுவே கதி என்று எங்கள் ஹெல்த் இன்ஸ்டிடூட்டில் நேரத்தைச் செலவிட ஆரம்பித்தேன்.  அங்கே ஒத்தகருத்துடைய பல நண்பர்கள் கிடைத்தார்கள்.  ஹோமியோ புத்தகங்களையும், இதழ்களையும் ஊர் ஊராகத் தேடிப்பிடித்து வாங்க, படிக்க,  கலந்துரையாட, அத்துறையில் நற்பெயர் பெற, அதனால் இந்த அற்புதமான மருத்துவத்தைப் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் மேலிட, தூய ஹோமியோபதி பிரச்சார சங்கம் (Association for Propagation of Classical Homeopathy - AProCH ) என்ற அமைப்பைத் தோற்றுவித்தோம். தமிழ்நாடு தழுவிய இந்த அமைப்பின் நிறுவன பொதுச் செயலராக நான் இருந்தேன்.  அங்கும் நண்பர்கள் பாஷையில் சொன்னால் "தூள் கிளப்பினேன்".

அந்தக் கால கட்டத்தில் ஹோமியோபதியை மக்கள் நன்றாகப் புரிந்துகொள்ள கருத்தரங்கங்களையும், கண்காட்சிகளையும் நடத்தினோம்.  காரைக்குடி  தொழில் வணிகக்  கழக மண்டபத்தில் ஒரு ஹோமியோபதிக் கண்காட்சி நடத்தினோம்.  அந்தக் கண்காட்சியில்  ஹோமியோபதி நூல்கள், மருந்துகள், விளக்கப் போஸ்டர்கள்,  அத்துறையில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்,  ஹோமியோபதியைப் போற்றிய பெருமக்களின் கருத்துக்கள்,  எங்கள் அமைப்பு நடத்திய நிகழ்ச்சிகளின்போது  எடுத்த புகைப்படங்கள் போன்றவற்றை வைத்திருந்தோம்.  கண்காட்சியைத் திறந்து வைத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மாவட்ட மேலாளர் (Regional Manager, IOB, Karaikudi)  அவர்களுக்கு  ஹோமியோபதி மருந்தை எளிதில் தேற உதவும் சிறந்த கம்ப்யூட்டர் மென்பொருளான "ஹோம்பாத்" (HOMPATH )  என்ற மென்பொருளை விளக்கிக் கொண்டிருக்கும்போது   எடுத்த படம் மேலே.  (அவரது பெயர் நினைவில் இல்லை; மன்னிக்க!)  அந்தக் கண்காட்சியில் எடுத்த படங்களில் இது ஒன்றுதான் மிச்சம்.  அப்ரோச்  அமைப்பின் மூலம் உங்கள் ஹோமியோ நண்பன் என்ற மாத இதழை நடத்தி வந்தோம்.  அதில் நிறைய கட்டுரைகள் எழுதினேன்.  பாராட்டுக்கள் பெற்றேன்.  ஆனால் ஒரு காலகட்டத்தில் அதிலிருந்தும் வெளியேறும் நிலை.  ஆனால் எனது விலகல் கடிதத்தை செயற்குழு ஏற்க மறுத்தது.  நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன்.  ஒரு ஞாயிறன்று  அன்பர்கள் என் வீடு தேடி வந்து தர்ணா செய்து விலகும் முடிவை மாற்றச் சொல்லி  என்னை வற்புறுத்தினர்.  எனினும் நான் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.  அதிலிருந்து படிப்படியாக ஹோமியோபதிக்கும் எனக்கும் உள்ள தொடர்பு குறைந்தது.  புத்தகங்கள், இதழ்கள் எப்படிப் பலவற்றையும் நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டேன்.  பின்னாளில் மனித மேம்பாடு அறிவியல் அமைப்பில்(Forum for Advancement of Science of Human Development-FASOHD) செயல்பட்டபோதும் இதே நிலை ஏற்பட்டு, அதைவிட்டு  விலகினேன்.  அங்கும் பலர் தொடரும்படி வற்புறுத்தினர்.  நான் முடிவில் உறுதியாக இருந்துவிட்டேன்.  பொது அமைப்புகளில் செயல்பட நான் லாயக்கில்லையோ என்று எனக்கே தோன்ற ஆரம்பித்துவிட்டது.  இப்போது நான் எந்த அமைப்பிலும் இல்லை.  எனது எண்ணங்கள், சிந்தனைகள் செயல்படுத்த சிறந்த வாகனங்களும் இல்லாமற் போனது.  இது இன்னோர் வகையான வேதனை.  எறும்பு, தேனீ இந்த இரண்டின் சுறுசுறுப்பையும் பல மடங்கு பெருக்கினால் வரும் அளவிற்கு சுறுசுறுப்பானவன், செயல்திறன் வாய்ந்தவன் என்றும், மற்றவர்களுக்கு ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம் என்றால், சூரி சாருக்கு மட்டும் நாற்பத்து எட்டு மணி நேரம் என்று என் அன்பிற்குரிய பேராசிரியர் ஒருவர் கூறும்படியும் பெயர் பெற்ற ஒருவனுக்கு எதுவுமே  இல்லாமல் இருப்பது கஷ்டந்தான்.  நிறைய புத்தகங்கள், இதழ்களிலிருந்து வெட்டியெடுத்து சேர்த்த குறிப்புகள் (கிட்டத்தட்ட பத்து பெரிய பெட்டிகள் நிறைய!),  லேட்டஸ்ட் கம்ப்யூட்டர்,  அளவற்ற நேரம், அளவற்ற டவுன்லோட்  கொண்ட பிராட்பேன்ட்  இணைப்பு(Internet Broadband  Connection with Unlimited Time and Unlimited Download)என்று இப்படி எத்தனை இருந்தும் சரியாகச் செயல்பட முடியாமல் நோய்  நொடிகளுடனும்,  கவலைகளுடனும் நேரத்தைக் கழிக்கின்றேன்.  எத்தனை நாள் இப்படிப் போகும், தெரியவில்லை. பார்க்கலாம்!       

2 ஆக., 2010

சூரியின் டைரி-21: மானாமதுரை நாட்கள்


1965ம்  வருடத்தின் இரண்டாம் பாதியிலிருந்து 1970ம்  வருடத்தின் முற்பாதி வரை எங்கள் குடும்பம் மானாமதுரையில் இருந்தது. இரயில்வேயில் பணிபுரிந்த என் தந்தை மாற்றலாகி அங்கே வர, எங்கள் குடும்பமும் அங்கே  வந்தது.  பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிப் படிப்பை தொடங்கும் தருணம் அது.  அப்போது மானாமதுரையில் கல்லூரி இல்லாத காரணத்தால் அருகிலுள்ள சிவகங்கையில், மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் புகுமுக வகுப்பில்  சேர்ந்தேன்.  தினமும் காலை ஏழு மணிக்கு மானாமதுரையிலிருந்து இரண்டு பெட்டி  டீசல் ரயில் கோச்  ஒன்று திருச்சி செல்லும்.  அதில் நாங்கள் (நானும் என்னைப்போல் மானமதுரையிலிருந்து சிவகங்கையில் படிப்போர் அனைவரும்) தினமும் செல்வோம்.  அதுபோல  மாலை  ஆறரை மணிக்கு  சிவகங்கை வரும் திருச்சி-மானாமதுரை இரண்டு பெட்டி டீசல் ரயில் கோச்சில் வீடு திரும்புவோம்.  வீட்டிற்கு வரும்போது மாலை ஏழேகாலுக்கு மேல் ஆகிவிடும்.  சிவகங்கை ரயில் நிலையத்திலிருந்து கல்லூரி செல்ல பேருந்தோ, மற்ற வசதிகளோ அப்போது கிடையாது.  நான்கு கிலோமீட்டருக்கு மேல் நடந்தாக வேண்டும்.  முகத்தில் அடிக்கும் காலை வெயில்.  அதே போல மாலை நான்கு மணிக்கு கல்லூரி முடிந்து, ரயில் நிலையம் வரும்போதும் முகத்தில் எதிர் வெயில் அடிக்கும்.  சமயத்தில் போதும் போதும் என்றாகிவிடும்.  

என்னுடைய கல்லூரிப் படிப்பு சுவையானதாகவோ, சுவாரசியமானதாகவோ இருக்கவில்லை.  முக்கிய காரணம், பள்ளிக் கல்வியில் நேர்ந்த முக்கியமான இழப்பு.  எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அறிவியல், கணிதம் பயிலமுடியாமல் (ஆசிரியர்கள் இல்லை; பள்ளி நிர்வாகம் வழக்கில் சிக்கியதால் ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்கப்படாமல் மூன்று ஆசிரியர்கள் தவிர அனைவரும் விலகிவிட்டனர். அந்த மூன்று ஆசிரியர்களும் அருகில் சொந்த வீடு, வயல், வேறு வருமானம் இருந்ததாலும், வயதாகிவிட்ட படியாலும் வேலையை விடமுடியாமல் தொடர்ந்தனர்.  அவர்கள் - தமிழாசிரியர், சம்ஸ்கிருத ஆசிரியர், ஹிந்தி பண்டிட்.)  என்னுடைய கல்வியறிவில் பெரியதொரு இடைவெளி விழுந்தது.  முக்கிய பாடங்களான அறிவியலிலும், கணிதத்திலும் அடிப்படையே  இல்லாமல் போனது.  அதனாலும், மற்றக் காரணங்களாலும் முதல் முறை  பல்கலைத் தேர்வில் வேதியல் வழுக்கியது; இரண்டாம் முறை இயற்பியல் இடறியது.  ஆனால் மூன்றாம் முறை அனைத்துப் பாடங்களிலும் நிறைய மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன்.  ஆனாலும் கடும் போட்டி காரணமாக கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனது.  என்ன செய்வது என்று தெரியாமல், ஏதாவது பொழுதுபோக்காக கற்றுக் கொள்ளலாம் என்று மானமதுரையிலிருந்த தட்டச்சுப்பள்ளியில், சுருக்கெழுத்து, தட்டெழுத்து கற்க ஆரம்பித்தேன்.  அப்போது எனக்குத் தெரியாது அவையே என் வாழ்வாக மாறிவிடும் என்பது.

ஓராண்டு கல்லூரி வாழ்வில் பழகிய நண்பர்கள், ரயில் நண்பர்கள் நட்பு நெருக்கமாகவில்லை.  சில பெயர்கள் மட்டும் நினைவில் நிற்கிறது:  ஜோதிராமலிங்கம், ராமன்,  சம்பத்குமார் என்ற பெயரில் இருவர்; அருள்; பெரியதிருவடி மற்றும் அவரது அண்ணன் காந்திமதிநாதன்.  (கடைசி இருவரின் தந்தையார் இரயில்வே ஊழியர்; என் தந்தையாரின் நெடுநாளைய நண்பர்). தட்டச்சுப்பள்ளியில் உடன் பயின்ற சிலரும், பயிற்றுவித்த  சிலரும் நண்பராகினர்.  அந்த தட்டச்சுப்பள்ளியே கதி என்று அங்குள்ள நண்பர்களுடன் பெரும்பாலான நேரத்தைக் கழித்தேன்.  அந்த நண்பர்களில் நாங்கள் மூவர் காரைக்குடியில் வேலை கிடைத்து 1969ம் வருட இறுதியில் காரைக்குடி வந்தோம்.  அந்தப் பிரியும் தருணத்தில் எடுத்த படத்தைத்தான் மேலே பதிவு செய்துள்ளேன்.

இடது புறமிருந்து.  முதலில் துரை.  எனக்கு ஜூனியர். அவருக்கும் எனக்கும் அவ்வளவு நெருக்கமில்லை.  அடுத்தவர் சண்முகராஜன்.  அவர் அங்கு எனக்கு சீனியர்.  பயிற்றுவித்தவர்.  பின்னாளில் மானாமதுரை பஞ்சாயத்து அலுவலகத்தில்  பணி    புரிந்தார்.  மூன்றாவது சீனு.  தட்டச்சுப்பள்ளியின் உரிமையாளரின் இளைய மகன்.  இவரும்  எனக்கு  ஜூனியர்.  அடுத்தது நான்.  அதாவது இடமிருந்து நாலாவது.  (அலுவலகத்தில் என் துறைத்தலைவர் இப்படத்தைப் பார்த்துவிட்டு,  உன்னைப் பார்த்தால் ஜமீன்தார் மகன் போல இருக்கிறது என்று ஆங்கிலத்தில் கூறியபோது உச்சி குளிர்ந்து போய்விட்டது).  அடுத்தது சோமா.  பள்ளி உரிமையாளரின் மூத்தமகன், சீனுவின் அண்ணன்.  அடுத்தது சுப்பிரமணியன்.  இதில் இல்லாத முக்கியமானவர் ராஜூ.  சோமா, ராஜூ மற்றும் நான்  1969 இறுதியில்  காரைக்குடி வந்தோம் - நானும்  ராஜுவும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியவும், சோமா ஒரு ஆடிட்டரிடம் பணிபுரியவும்.

மானாமதுரையில் என்னால் மறக்கமுடியாதவை:  வைகை ஆற்றுப்படுகையில் மாலைப் பொழுதை நண்பர்களுடன் கழித்தது.  (எங்களுக்கெல்லாம்  அதுதான்  மெரீனா பீச்.) ஆற்றைக் கடந்து கீழ்கரையில் இருந்த அமுது தியேட்டரில் நண்பர்களுடன் சினிமா பார்த்து மகிழ்ந்தது.  மானமதுரையிளிருந்த பெரிய நூலகம்.  (எவ்வளவோ அற்புதமான புத்தகங்களை அங்கே படித்திருக்கிறேன்.)

இன்று ராஜூ தவிர மற்ற நண்பர்களின் தொடர்பு முற்றிலுமாக விடுபட்டுவிட்டது.  ராஜூ கூட எதிர்ப்படும்போது நலமா என்று ஒரு சில நிமிடங்கள் பேசுவதோடு சரி.  காலம் என்ற உரைகல்லில் இந்த நட்புகள் கரைந்து போய்விட்டன.

சமீபத்தில்  தற்செயலாகப் பார்த்த ஒருவர் தான் மானாமதுரையில் இருப்பதாகக் கூற,  அவரிடம் தற்போது ஊர் எப்படியிருக்கிறது என்று நான் வினவ, அவர்,  நாற்பது ஆண்டுகளுக்கு முன் நீங்கள் பார்த்த ஊர் இப்போது இல்லை;  முற்றிலுமாக மாறிவிட்ட புதியர் ஊர் என்றார்.

மானாமதுரையில் எனது பழைய நண்பர்கள் யாராவது இப்போது இருப்பார்களா என்று தெரியவில்லை;  அப்படி இருந்தாலும் நட்பு ஒட்டுமா என்று தெரியவில்லை.  மற்றபடி  அந்த  ஊர்  மீது தணியாத பாசமோ, பிடிப்போ எதுவும் இல்லை.  இன்னும் சொல்லப்போனால் என் வாழ்வில் பழசை நினைத்து ஏங்கும்படியான  சம்பவங்களோ, இடங்களோ இல்லை. (There is nothing in my life to feel nostalgic about).  இருப்பினும் சில நாட்களாக ஒரு எண்ணம்:  ஒரு முறை மானாமதுரை சென்று வந்தாலென்ன?  பார்க்கலாம், அநேகமாகப் போவேன்;  அப்படிப் போனால் அதைப் பற்றி இங்கே எழுதுகிறேன்.  

1 ஆக., 2010

அன்பு-1: எங்கும் அன்பு

காலைக்  கனி  முகம் கண்டு  இருள்  விலகியது;  கனவோழின்தது;  கண்கள் விழித்தன;  மலர்கள்  பூத்தன;  புல்லிசை  பொங்கியது;  அன்பர்  பாடுகின்றனர்.  உலகம்  அமைதிக்  கோயிலாக  விளங்குகிறது.  அச்சமயம்  கிழக்கு  நோக்கித்  தியானிப்போம்;  அப்போது,  உள்ளத்தில்  அன்பு  மலர்கிறது.  உலகமே  அன்புமயமாகக்  காண்கிறது;  அந்த  அன்பு  அமைதியிற்  பூத்தது.  சுற்றிலும்  காணும்  இயற்கை  அன்புவழி  காட்டுகிறது.

"அன்பு,  அன்பு"  என்று  இளங்காற்று  வீசுகிறது.  "அன்பு, அன்பு"  என்று  நாண்மலர்கள் புன்னகை புரிகின்றன;  தென்றலுக்கு  மனவிருந்தளிக்கின்றன;  வண்டிற்குத்  தேன்  விருந்தளிக்கின்றன;  "அன்பு, அன்பு"  என்று விழித்தெழுந்த  புட்கள்  சிறகடித்து,  பாடிப்  பறக்கின்றன;  "அன்பு, அன்பு"  என்று  பசும்பயிர்கள்  இளங்காற்றில்  உளம்  சிலிர்த்து  அசைகின்றன.  "அன்பு,  அன்பு"  என்று  நீரோடை  பாய்கிறது;  தோட்டக்காரரின்  ஏற்றச்சால்  "அன்பு, அன்பு"  என்று  இறைக்கிறது.  கோபாலர்  குழலோசை  "அன்பு, அன்பு"  என்று  தவழ்கிறது.  குழலினும்  இனிய  சேய் மழலை  "அன்பு, அன்பு"  என்று கொஞ்சுகிறது;  தாயின்  உள்ளம்  "அன்பு, அன்பு"  என்று  சேயைத்  தழுவி  முத்தம்  இடுகிறது.  காதலர்  கண்கள்  அன்புடன்  காண்கின்றன.  அடியார்  அன்புள்ளம்  அன்புக்  கடவுளைக்  கூவுகிறது;  கோயில்களில்  அன்பிசை  முழங்குகிறது.  'செய் தொழில்'  என்று  அன்பு  உந்துகிறது;  உலகம்  தொழிர்சாளையாகிறது.  காதல்  அன்பால்  இல்லறம்  உழைக்கிறது;  பிழைக்கிறது.  மக்கலன்பால்  மன்னராம்  தழைக்கிறது;  நீதி  செழிக்கிறது.  கடவுலன்பால்  அருளறம்  பொழிகிறது;  மடமை  நலிகிறது.

எங்கும் பேச்சொலி, பாட்டொலி,  வினையோலி - உலகமே  ஒலிமயமாகிறது...  இந்த ஒலியுலகை  மேற்பார்க்க  அதோ  கதிரவன் வருகிறான்;  அன்புக்  கதிர்களால்  உலகை  ஆசீர்வதித்து  வருகிறான்.  அவனை  உலகம் ஆவலாக  வரவேற்கிறது.  அவனுக்காகச்  சாந்தி  தோத்திரங்கள்  நடக்கின்றன.  இருளிற்  குவிந்த  தாமரை  முகை  அவிழ்ந்து  நகை குலுங்க  அவனை  வரவேற்கிறது.  நீலவானில்  மௌனச்  சாட்சியாக  அவன்  செல்லுகிறான்.  செல்லும்போதே  பயிர்களையும்,  உயிர்களையும்  வாழ்த்துகிறான்;  இயல்பாக  உலகைச்  சிற்பமயமாக்குகிறான்.  கோடை வெயில் போருக்க  முடியவில்லை;  அதோ,  சோலை  நிழல்  நம்மை  அழைக்கிறது.  அங்கே  அன்புக்  காற்று  வீசுகிறது;  மரங்கள்  அன்புக்கனிகள்  தருகின்றன.  தம்  கனிகளைத்  தாமே  உண்ணாது  உலகிற்கு  ஊட்டும்  இந்த  மரக்  கருணையை  என்னென்பது!   வறண்ட  கோடை;  பயிர்கள்  வானை  நோக்கி  வாடுகின்றன.  "இதோ  வந்துவிட்டேன்"  என்று  வானத்  தாய்  அன்பு  முழங்குகிறாள்.  கார்  மேகங்கள்  படலம்  படலமாகக்  குவிகின்றன.  அன்பு  மழை  பொழிகிறது;  பயிர் செழிக்கிறது.  வானின்  அன்பை  உலகே  வளர்க்கிறது.  மாலையில்  பொன்மயமான  அன்புனகை  குலுங்கி  அவன் மறைகிறான்;  அவனுக்குப் பின்  ஆயிரம்  அன்புக்  காட்சிகள்  காண்கின்றன.  அந்தி  மல்லிகையின்  உள்ளத்தைப்  பாருங்கள்!  அன்புப்  புன்னகை  மணக்கிறது;  வானை  இருள்  மூடுகிறது;  அந்த  இருளில்  எத்தனை இந்திரா  ஜாலங்கள்  நடக்கின்றன!  வானத்தில்  கோடி  கோடி  அன்பு  மலர்கள்  மிளிர்கின்றன.  "பாருங்கள்  அன்பு, அன்பு"  என்று  அவை  இமைத்து  நம்மை  அழைக்கின்றன!   அன்புனகை  பளிச்சிட்டு  மின்னல்கள்  தாவுகின்றன.  "அஞ்சாதே;  இதோ  நான்  இருக்கிறேன்"  என்று  அன்புத்  தந்தையொருவர்  நமக்குத்  துணிவு  சொல்லுகிறார்.

வெள்ளி  அன்னம்  போலச்  சந்திரன்  தவழ்ந்து  வருகிறான்;  அன்பு நிலா  பொழிகிறான்.  குமுதம் மகிழ்கிறது.  கடல்  ஆசைவேரியேரி  "ஆ!  என் அன்பே"  என்று  ஆர்க்கிறது!  நமது  அன்புள்ளம்  வெண்ணிலாவுடன்  கூடிக்  குழைகிறது.  எத்தனை,  எத்தனை  அன்புக்  காட்சிகள்  நம்மைச்  சுற்றி  விளையாடுகின்றன!  வான்,  மீன்,  கதிர்,  மதி,  தீ,  காற்று,  கடல், மலை, அருவி, வயல், வனம்,  பயிர், உயிர்  எல்லாம்  இந்த  எல்லையற்ற  அன்பு நாடகத்தின் பாத்திரங்களேயாம்.   இந்த  அன்பு  நாடகத்தில்  நாமும்  பாய்த்திரரே;  நமது  வேடத்தை  அன்புடன்  அன்பிற்காக  நடிப்போம்;  இயற்கையிர்  காணும்  இந்த  அன்பே  வாழ்வு,  வாழும்  வகை,  வாழ்வின்  இரகசியம்;  இந்த  அன்பே  வேதங்களின்  உள்ளம்;  இந்த  அன்பே  இறைவனை  அடையும்  வழியுமாம்.

தவயோகி  சுத்தானந்த  பாரதியார்  அவர்கள்  எழுதிய  அன்புவழி  என்னும்  நூலிலிருந்து.  (அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி  மாவட்டம்,  1941 )              

அலெக்ஸ் பக்கம்-19: கைவண்ணம்-17

தாயுமானவரின் பராபரக்கண்ணி-23:

சுத்த  அறிவாய்ச்  சுகம்பொருந்தின்அல்லால்  என்
சித்தம்  தெளியாதென்    செய்வேன்  பராபரமே.  
   

யோக சித்தி-37: உலக வாழ்வு-3

எத்தனையோ  காரியங்கள்  இந்த  வினையுலகில்;
அத்தனையும்  ஆடலேனக்  காண்.

எல்லையற்ற தொழிற்சாலையாகிய இந்த  உலகத்தில்  எத்தனையோ  காரியங்கள்  நடக்கின்றன;  நல்லதும், பொல்லதும் அவரவர் குணங்களுக்கேற்றபடி  நடக்கின்றன.  அத்தனை  வினைத்தொகுதிகளையும்  அவரவர் சுபாவத்தின்படி  இயற்கை புரியும்  விளையாட்டென்றே  சாட்சியாகக்  காண்க.